விவேகம் திரை விமர்சனம்

0

விவேகம் திரை விமர்சனம்

பல்கேரியாவில் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட் ஏ கே (அஜய் குமார்). தேட முடியாதவர்களைக் கண்டுபிடிப்பது, கொல்ல முடியாதவர்களை தேடிக் கொல்வதில் ஸ்பெஷலிஸ்ட். மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர்.
அஜித்தின் உயிர் நண்பன் மற்றும் டீம் மேட் ஆர்யன் (விவேக் ஓபராய்). உலகின் மூன்று இடங்களில் செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கி அழிக்கக்கூடிய ஆயுதத்தை செயலிழக்கச் செய்யும் அசைன்மெண்ட் அஜித் டீமிடம் வருகிறது. அதற்காக நடாஷா என்கிற பெண்ணைக் கண்டுபிடிக்க கிளம்புகிறார். நியூக்ளியர் வெடிகுண்டுகளை அகற்றும் பாஸ்வேர்ட் அக்ஷரா ஹாசனுக்கு தான் தெரியும்.

அவரை அஜித் கண்டுபிடித்து ஆயுதத்தை செயலழிக்கச் செய்யும் டீக்ரிப்ஷன் ட்ரைவையும் கைப்பற்றுகிறார்.பின்னர் அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க அவரை அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சரமாரியாக சுட்டுத்தள்ளுகின்றனர். அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.

இந்நிலையில் உயிருடன் திரும்ப வரும் அஜித் உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கும் தன் நண்பர்களை எப்படி பழி வாங்கி, அவர்களால் வரும் பிரச்சனைகளை எப்படி முறியடித்து உலகையும் எப்படிக் காக்கின்றார், தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.


தனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸ{க்கும் தீனி போடும் படமாக ‘விவேகம்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மட்டுமே அமைந்திருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகன் அறிமுகமாவதைப் போல, அஜீத்குமார் சுற்றி துப்பாக்கிகள் குறிவைத்திருக்க, சாவகாசமாக நடந்து சென்று பிரம்மாண்டமான அணையில் குதித்து, குண்டு மழைக்கு நடுவில் அநாயாசமாய்ப் புகுந்து தப்பிக்கும் ஒன்மேன் ஆர்மி நாயகனாக ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியில் அறிமுகமாகிறார். 30, 40 பேர் சேர்ந்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அஜீத் மேல் ஒரு குண்டுகூட படுவதில்லை. மிகப் பெரிய அணைக்கட்டிலிருந்து கீழே குதிக்கும் அஜீத், கீழே விழுந்துகொண்டிருக்கும்போது துப்பாக்கியை எடுத்துச் சுட்டு நான்கைந்து பேரைக் கொன்றுவிடுகிறார். அஜீத்தின் அட்டகாசமான அறிமுகக் காட்சியோடு தொடங்கும் திரைப்படம், அதன் பின்னர் படம் பார்க்கும் ரசிகர்களை சற்றே தடுமாற வைக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்த சண்டை எதற்காக, யாருடன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பது தெளிவாகப் புரியும்படி காட்சி படுத்தியிருப்பார்கள்.ஆனால் விவேகம் படத்தில் அந்த தெளிவு இல்லை? துவக்கம் முதல் படம் முடியும் வரை தொடர்ந்து யாராவது யாரையாவது சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.

அஜீத்குமார் தன்னால் முடிந்த வரை தன்னுடைய ரசிகர்களுக்கு பைக் சேஸ், எக்கச்சக்க ஸ்டண்ட் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என எல்லாவற்றையும் புதிதாக ரொம்பவே ஸ்டைலாக காட்ட முயற்சித்துள்ளார். மாடுலேஷன் இல்லாத அஜீத்தின் டயலாக் டெலிவரி மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

படுதோல்வி அடைந்த அஞ்சான் படத்தில் சூர்யா டயலாக் ‘நான் சாகனும்னு முடிவு பன்னா, அதை நான் தான் முடிவு பண்ணனும். நீ சாகனும்னு முடிவு பன்னா, அதையும் நான் தான் முடிவு பண்ணனும்”.

அது போல இந்த படத்தில் ஆஜீத்தின் டயலாக் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும், நீ தோத்துட்டத் தோத்துட்டன்னு, உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரை எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. ‘Never ever give up’ என வசனம் பேசுகிறார்.
படத்தில் இதே வசனத்தை, காஜல் அகர்வாலிடம் ஓரிடத்தில் சொல்வார். படத்தில் வசனமே இல்லை என்றால் கூட இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும்.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் அஜீத் கடுமையாக உழைத்திருக்கிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டதால், அவரது சில அசாத்திய சண்டைக்காட்சிகள் கூட நம்பும்படி இருந்தது. பல காட்சிகளில் அவர் படும் வேதனையையும் அவஸ்தையையும் (கடைசியில் டைட்டிலில்) கண் முன் காட்டுகிறார்கள். ஆக்ஷனுக்காக மெனக்கெட்ட அஜீத், அப்படியே கதையில் முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தால் விவேகம் பேசப்பட்டிருக்கும்.
காஜல் அகர்வால் அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

நண்பனின் பெருமை பேசிக்கொண்டே வில்லத்தனம் செய்யும் விவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் வலம் வருகிறார். அஜித் எப்படியாப்பட்டவர் தெரியுமா எனப் பேசுகிறார். மறுபடி வருகிறார் அஜித் அப்படியாப்பட்டவர் என சொல்கிறார். படம் முழுக்க ‘நண்பா நண்பா” என்று போனில் சொல்லுவது மட்டும்தான் அவருக்கான வேலை.

ஒரு ஹேக்கராக அக்ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அஜீத் அவரை விரட்டி கண்டு பிடிக்கும் காட்சிகள் மட்டும் சுவாரஸ்யமாக இருக்கின்றது.

படத்தில் பல்கேரிய மொழி பேசும் காட்சிகளுக்கு ஸ்டைலிஷ் தமிழில் வசனம் உள்ளது. ஆனால் அல்பேனிய மொழிப் பெயர்ப்புக்கு மட்டும் அருமைப் பிரகாசம் (கருணாகரன்) இருப்பார். கருணாகரன் காமெடியனாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டிவிட்டு திடீர்ன்னு காணாமல் போகிறார்.

செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிகம் வேலை இல்லை.

வழக்கம் போல் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால் பலவீனமான கதைக்கு பிரமிப்பூட்டும் அனிருத்தின் பின்னணி இசை பலனில்லாமலே போயிருக்கின்றது.

வெற்றியின் ஒளிப்பதிவில் பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பது படத்திற்கு பலம்.
தொழில்நுட்ப கலைஞர்கள் வெற்றியின் கேமராவும், ரூபனின் படத்தொகுப்பு, கலை இயக்குனர் மிலனின் செட்டும் ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளுக்காக உழைத்த அஜித்தும், ஸ்டண்ட் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுடைய உழைப்பு படத்தின் தொழில்நுட்பத் தரத்தை உறுதி செய்கின்றது. ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கலோயன் வோடனிச்சரோவ் மற்றும் கணேஷின் சண்டைக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம்.

படத்தோட தலைப்புக்கேத்த மாதிரியே ஹீரோ அஜித்தை ஒரு விவேகமான கேரக்டராதான் உருவாக்கியிருக்காரு இயக்குனர் சிவா. வீரம், வேதாளத்தை தொடர்ந்து ஆஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துணும்ங்கிற ஒரே நோக்கத்துக்காக மட்டுமே அழுத்தமில்லாத கதைக் கருவுடன் இந்த படம் எடுத்த மாதிரி தெரியுது இயக்குனர் சிவா. அஜீத்தின் ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலுமே விசிலடித்து ரசிக்க வைக்க வேண்டுமென முயற்சித்து, லாஜிக்கைப் பத்தி எந்த கவலையும் இல்லாம திரைக்கதை அமைத்திருக்கின்றார் இயக்குனர் சிவா. கிராஃபிக்ஸ் மற்றும் விஷ{வல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பமும், அதைப் பயன்படுத்திக்கொண்ட விதம் பாராட்டிற்குறியது. ஹாலிவுட் மேக்கிங்கிற்கு கவனம் செலுத்திய சிவா நம்மூர் மக்களை ஏமாற்றி விட்டார். விவேகத்திற்கு பிறகு சிவா – அஜீத் மீண்டும் இணைவது சந்தேகம் தான்.

தயாரிப்பாளர் ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்” டி.தியாகராஜன் தயாரிப்பில் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்ட ‘விவேகம்” திரைப்படம், அஜீத்தின் கேரியரிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆகும்.
அஜித்தும் சிவாவும் சேர்ந்து தயாரிப்பாளரை மட்டும் வாழவைத்துள்ளார்கள். விவேகம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றி விட்டார்கள்.

மொத்தத்தில் ‘விவேகம்” ரசிகர்களுக்கு துரோகம்.