வில்லன் நடிகரின் விஸ்வரூபம்! – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு
ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் இப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் அறிமுகமாகும் ரவிஷங்கர், படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து, கதாநாயகிக்கு செய்த உதவியால் ஒட்டு மொத்த ‘ஓட்டம்’ படக்குழு அவரை பாராட்டி வருகிறது.
கதாநாயகி ஐஸ்வர்யா சிந்தோஷிக்கு, பாடல் காட்சிக்குண்டான உடைகளை வாங்க, போகும் போது, “உடை வாங்க நானும் வருகிறேன்” என்று கூறி ஐஸ்வர்யாவும் கிளம்பியுள்ளார்.
பெங்களூரில் உள்ள பெரிய ஷாப்பிங் மாலில் உடைகள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சில வாலிபர்கள், நாயகியிடம் பேசியதோடு, கமெண்ட் செய்து அவரை கேலி பண்ண, அப்போது அங்கிருந்த வில்லன் நடிகர் ரவிஷங்கர், அவர்களை தட்டிகேட்டுள்ளார். பதிலுக்கு அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரவிஷங்கர், அந்த இளைஞர்களில் ஒருவனை ஓங்கி அறைந்து, “போயிடுறீங்களா, இல்லை போலீஸை வரவழைக்கவா” என கேட்க, அந்த இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதைக்கண்டு, கதாநாயகி மற்றும் அங்கிருந்த மக்கள் ரவிஷங்கரை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி அறிந்த ‘ஓட்டம்’ படக்குழுவினர், திரையில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் கண் முன் நடந்த தவறை தைரியமாக தட்டிக்கேட்டு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்ததாக, நடிகர் ரவிஷங்கரை பாராட்டி வருகிறார்கள்.
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை அடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா, இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஷி நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த அனுஸ்ரேயா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் தீனா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஜோசப் ராய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம்தேவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மஞ்சு நடனம் பயிற்சியையும், சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி ஆகியோர் அசோசியேட் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மர்மம் மற்றும் திகிலான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் உருவாகும் ‘ஓட்டம்’ படத்தின் படப்பிடிப்பு படத்தை போலவே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.