விஜய் 66 – மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜு

0
42

விஜய் 66 – மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜு

நடிகர் விஜயின் 66-வது திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகவுள்ளநிலையில், தீபாவளியை முன்னிட்டு திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக, அப்படத்தின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருவபர் நடிகர் விஜய். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா ஊரடங்கிலும் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து, ‘கோலாமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஜய் 66 படம் குறித்து அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில், நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்தப் படத்தை எஸ்.வி.சி. கிரியேஷன் தயாரிக்கிறது. தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி, விஜய் 66 படத்தை இயக்க உள்ளார். தெலுங்கு திரையலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள், இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில், விஜய் 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், “வம்சி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுபோல், படத்தின் கதையைக் கேட்டப்பிறகு நடிகர் விஜயும், ‘இதுபோல் ஒரு கதையைக் கேட்டு 20 வருடங்களாக ஆச்சு’ என்று சென்னார். ஒரு பெரிய நடிகர் இவ்வாறு கூறும்போது, படக்குழுவுக்கு அது ஒரு புது நம்பிக்கையை கொடுக்கும். இந்தப் படம் விஜய் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று நல்ல குடும்பப் படமாக இருக்கும். படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெற்றால், விஜய் 66 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். கொரோனா காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானால், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்” இவ்வாறு கூறியிருந்தார். இந்த வருடத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளதால், விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். படப்பிடிப்பு முதல் ரிலீஸ் தேதிவரை இப்போதே படக்குழு திட்டமிட்டுள்ளது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.