விஜய் சேதுபதி போலவே ஜோஜு ஜார்ஜும் கடின உழைப்பாளி – கார்த்திக் சுப்புராஜ்

0
9

விஜய் சேதுபதி போலவே ஜோஜு ஜார்ஜும் கடின உழைப்பாளி – கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வரும் 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாகவிருக்கிறது. இதில், ஸ்டைலிஷ் கேங்ஸ்டராக மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படத்தின் மூலம் கவனத்தையும் பாராட்டுகளையும் குவித்தார் ஜோஜு ஜார்ஜ். மெடிக்கல் க்ரைம் த்ரில்லரான இப்படம், தமிழில் இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஜோஜு ஜார்ஜை தனது ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடிக்க வைத்தது குறித்து கார்த்திக் சுப்புராஜ் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், ”ஜகமே தந்திரம் படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்திற்காக நிறையப்பேரை நினைத்துக்கொண்டிருந்தோம். பலரிடம் பேசினோம். ஆனால், ஜோஜு ஜார்ஜ்தான் சரியாக பொருந்திப்போனார். ’சோழா’, ’ஜோசப்’ படங்களில் அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.

குறிப்பாக, ’ஜோசப்’ படத்தில், வயதான காவல்துறை அதிகாரி கெட்-அப்பில் ஈர்க்கப்பட்டேன். விஜய்சேதுபதி போலவே ஜோஜு ஜார்ஜும் கடின உழைப்பாளி. ஜூனியர் ஆர்டிஸ்டாக பல ஆண்டுகள் பணியாற்றி விட்டுத்தான் இன்று முன்னுக்கு வந்திருக்கிறார். இந்தப்படம் வெளியானால் அவரது கேரக்டரைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்படுவார்கள். அவருடன், பணியாற்றியதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.