‘விசித்திரன்’ காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு : தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி பாராட்டு

0
125

‘விசித்திரன்’ காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு : தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி பாராட்டு

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த சினிமா ‘ஜோசப்’. இத்திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சினிமாவை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் இதில் பூர்ணா, மதுஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்த ‘விசித்திரன்’ படம் பிரசாத் லேப் தியேட்டரில் திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காக சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.

ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குநர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் இந்த ‘விசித்திரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர்கள் அனைவருமே படம் மிக சிறப்பு என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழி நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் ‘மாயன்’ என்ற கதாபாத்திரத்தில், மிக சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்து இயக்குநர்கள் அனைவரும் ஆர்.கே.சுரேஷை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

படத்தின் முடிவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முளைக்க செய்யும் முதல் முயற்சிதான் இந்த சினிமா. அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர்.கே.சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு மரணம் இல்லை. காலத்துக்கும் பெயர் சொல்லும் படைப்பு இது. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே, அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். ஆர்.கே.சுரேஷூக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்..” என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை. தலைவரிடம் சொன்னேன். உடனேயே மற்றைய உறுப்பினர்களுக்காக சிறப்புக் காட்சியை தயார் செய்ய சொன்னார். அந்த ஏற்பாட்டின்படி இன்று நாம் அனைவருமே படத்தைப் பார்த்துவிட்டோம். என்னைப் போலவே உங்களுக்குள்ளும் இந்தப் படம் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “இந்த ‘விசித்திரன்’ படத்தின் மூலமாக R.K.சுரேஷ் என்ற நேர்த்தியான நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டதாக நான் நினைக்கிறேன். தொடர்ந்து இது போன்ற நடிப்புக்கு சவால் விடும் கதாபாத்திரங்களில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க வேண்டும். இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற என் வாழ்த்துக்கள்…” என்றார்.

அதன் பிறகு, ஒவ்வொரு துணை, இணை, உதவி இயக்குநர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அதை படக் குழு விளம்பரத்துக்காக எந்தவித எடிட்டும் செய்யாமல், அதை அப்படியே தனது நிறுவனத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளது.