‘விக்ரம் வேதா முதல் மாஸ்டர் வரை’ – இந்தியில் ரீமேக்காகும் 10 தென்னிந்திய திரைப்படங்கள்!

0
65

‘விக்ரம் வேதா முதல் மாஸ்டர் வரை’ – இந்தியில் ரீமேக்காகும் 10 தென்னிந்திய திரைப்படங்கள்!

தென்னிந்திய திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவரும் நிலையில், தற்போது இந்தியில் ரீமேக்காகும் முக்கிய திரைப்படங்களை பற்றி இங்கு நாம் காணலாம்.

பிரபாஸின் ‘பாகுபலி’க்கு முன்னதாகவே தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டாலும், ‘பாகுபலி’க்குப் பின்னர், தென்னிந்திய திரைப்படங்கள் மீதான மோகம் பாலிவுட்டில் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், கொரோனா ஊரடங்கால், தென்னிந்தியாவில் பெரும்பாலான ஸ்டார் அந்தஸ்து நடிகர்கள்கூட, ஓ.டி.டி தளத்திற்கு செல்வதை நாம் பார்க்கமுடிகிறது. இந்த ஓ.டி.டி. தளத்தால், பான் இந்தியா எனப்படும் இந்திய அளவில், தென்னிந்திய திரைப்படங்கள் கவனம் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. ஒருபக்கம் தென்னிந்திய நடிகர்களுக்கு, வட இந்தியாவில் சமீபகாலமாக மார்க்கெட் எகிறிவரும் காரணமாக, அவர்களின் படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இருப்பினும், தென்னிந்திய திரைப்படங்களின் ரீமேக்கில் நடிக்க பாலிவுட் ஹீரோக்களும், அந்த திரைப்படங்களை தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டிவருவதால், அவ்வாறு ரீமேக் செய்யப்படும் 10 படங்கள் பற்றி இங்கு காணலாம்.

1. ‘விக்ரம் வேதா’ (VIKRAM VEDHA-2017)

விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. தென்னிந்தியாவில் மாஸ் ஹிட் அடித்த படம் என்று சொன்னால் மிகையாகாது. ரௌடி கும்பலின் தலைவனாக, கெட்டவனாக செதுக்கப்பட்ட வேதா கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியின் மிரட்டல் நடிப்பும், நேர்மையான போலீஸாக விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவனின் துள்ளல் நடிப்பும் வெகுஜன மக்களை கவர்ந்தது. இந்தப் படம் புஷ்பா-காயத்ரி இயக்கத்திலேயே, தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், ஹிர்த்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சயீப் அலிகானும் நடிக்கின்றனர். சமீபத்தில், வேதா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹிர்த்திக் ரோஷனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

2. ‘ஹிட்’ (HIT – 2020)

விஸ்வாக் சென் மற்றும் ருஹானி சர்மா நடிப்பில், சைலேஷ் கொலனு இயக்கத்தில், தெலுங்கில் தாறுமாறு வெற்றியடைந்த திரைப்படம் ‘ஹிட்’. காணாமல்போன போன பெண்ணைத் தேடும் விசாரணைக்குழு போலீஸ் அதிகாரியின் கதையை, த்ரில்லருடன் சொல்லியவிதத்தால் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில், ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்க, சானியா மல்ஹோத்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.

3. ‘ஜெர்சி’ (JERSEY – 2019)

ரஞ்சி கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நானி நடிப்பில், தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஜெர்சி’. கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் கதாநாயகன், பின்னர் கிரிக்கெட்டை விட்டு சாதாரண மனிதாக குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறான். அதன்பின்னர், மகனுக்காக 10 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கிரிக்கெட்டில் வந்து எவ்வாறு சாதிக்கிறான் என்பதே, படத்தின் உணர்ச்சிப்பூர்வமான கதை. கவுதம் தின்னானூரி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியில் சாகித் கபூர், மிருணாள் தாக்கூர் மற்றும் பங்கஜ் கபூர் நடிப்பில் தயாராகி உள்ளது.

4. ‘டிரைவிங் லைசென்ஸ்’ (DRIVING LICENCE – 2019)

பிரித்விராஜ் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியான மலையாத திரைப்படம் ‘டிரைவிங் லைசென்ஸ்’. தொலைந்துபோன டிரைவிங் லைசென்ஸை மீண்டும் பெறுவதற்காக, நடிகர் ஒருவர் படும்பாட்டை, நகைச்சுவையாகயும், நெகிழவைக்கும் விதமாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டவிதத்தால் இந்தப்படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படம் ‘செல்ஃபி’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில், அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஸ்மி நடிக்கின்றனர். ராஜ் மேத்தா இயக்க, கரன் ஜோகர் மற்றும் பிரித்விராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.

5. ‘யு- டர்ன்’ (U-TURN – 2018)

சமந்தாவின் வித்தியாசமான நடிப்பில், பவன் குமாரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘யு- டர்ன்’. மேம்பாலம் ஒன்றின் நடுவில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை அகற்றிவிட்டு, அங்கேயே யு-டர்ன் எடுத்து செல்பவர்களை பற்றி கட்டுரை எழுதும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருப்பார். அப்படி யு-டர்ன் அடித்து செல்பவர்கள் எல்லாம் இறந்துவிட, மிகவும் மர்மங்களுடன் கூடிய த்ரில்லர் கதையை இயக்குநர் கொடுத்திருப்பார். இந்தப் படம் இந்தியில் ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகிறது. இதில் ஆலயா பர்னிச்சுருவாலா, சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

6. ‘சூரரைப் போற்று’ (SOORARAI POTTRU – 2020)

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நீண்ட நாட்களாக மாஸ் வெற்றியை எதிர்பார்த்த நடிகர் சூர்யாவுக்கு, இந்தப் படம் மாபெரும் வெற்றியுடன் அடுத்த தளத்திற்கு சூர்யா செல்ல துணைப் புரிந்தது. ஏர் டெக்கான் எனும் விமான நிறுவனத்தை துவக்கியவரான ஜி.ஆர். கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படம் இந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் ரீமேக் ஆக உள்ளது. இந்தப் படத்தில் சூயாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அஜய்தேவ்கன், ஜான் ஆப்ரஹாம், அக்ஷய்குமார், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்பட்டாலும், இதுவரை கதாநாயகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து இயக்குநர் சுதா கொங்கரா கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு நடிகரை அணுகுவதற்கு முன், ஸ்கிரிப்ட் சரியான விதத்தில் இருக்க வேண்டும். கதாபாத்திரம் எப்படி இருக்கப்போகிறது, எந்த வட்டார மொழியை பயன்படுத்த வேண்டும், இந்தியாவின் எந்தப் பகுதியில் இந்தப் படத்தை எடுக்கப் போகிறோம், எங்கு பார்க்கப் போகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டுதான், படத்தில் கதாபாத்திரத்தை அமைக்கப் போகிறோம். அதன் பிறகுதான் எனது நடிகரைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்தியில் எடுக்கப்படும் ‘சூரரைப் போற்று’ படத்தை, சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெயிண்ட் தயாரிக்க உள்ளது.

7. ‘அருவி’ (ARUVI -2017)

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘அருவி’. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், எய்ட்ஸ் நோயாளியாக கதாநாயகி சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இந்தியில், இ-நிவாஸ் இயக்க ‘தங்கல்’ திரைப்படத்தில் நடித்த பாத்திமா சனா ஷாயிக் நடிப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால், கடந்த வருடம் திட்டமிட்டப்படி எடுக்க முடியாமல் போனதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தப் படத்திலிருந்து பாத்திமா சனா ஷாயிக் வெளியேறியதாக கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், படத்தை தயாரிப்பதில், படக்குழு உறுதியாகயுள்ளது.

8. ‘ஹெலன்’ (HELEN – 2019)

‘கும்பலாங்கி நைட்ஸ்’ திரைப்பட நடிகையான அன்னா பென், மகளாகவும், மூத்த நடிரகரான லால், தந்தையாகவும் நடித்து மலையாளத்தில் த்ரில்லர் நிறைந்தப் படமாக வெளிவந்தது. பகுதிநேரமாக வேலைப் பார்க்கும் உணவகத்தில், தவறுதலாக ப்ரீசர் அறையில் மாட்டிக்கொண்டு நாயகி தப்பிக்கும் கதையே ‘ஹெலன்’. இந்தப்படத்தை இந்தியில் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளார்.

9. ‘கைதி’ (KAITHI – 2019)

முக்கிய பெண் கதாபாத்திரம் இல்லாமல் உருவான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், ஜாஜ் மர்யன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் தமிழில் வெளியான இந்தத் திரைப்படம், இந்திய அளவில் கவனிக்கத்தக்க படமாக உருவாகியது. இதன் இந்தி பதிப்பில் அஜய் தேவ்கன், கார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

10. ‘மாஸ்டர்’ (MASTER-2021)

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா ஊரடங்கில், 50 சதவீத இருக்கைகளுடன் பொங்கலுக்கு வெளியாகி, பல சாதனைகளை புரிந்த படம். இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சல்மான்கான் மற்றும் சாகித் கபூரிடம் படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தப் படங்களை தவிர, அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரம்லோ’, விக்ரமின் ‘அந்நியன்’, விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, அருண் விஜயின் ‘தடம்’, ஜெயம் ரவியின் ‘கோமாளி’, ரஹ்மானின் ‘துருவங்கள் பதினாறு’, சந்தீப் கிஷன் மற்றும் ஸ்ரீயின் ‘மாநகரம்’ ஆகிய படங்களும் வரிசையாக ரீமேக் ஆக உள்ளன. ஏற்கனவே ‘கஜினி’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றாலும் ‘ரன்’, ‘குஷி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘வெல்லனாகலூடே நாடு’, ‘சாமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘காஞ்சனா’, ‘அர்ஜூன் ரெட்டி’ உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உறுதுணை ; India Today