வெளியானது அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வீடியோவில் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டது பற்றி, கொரோனா ஊரடங்கால் படக்குழு சிரமத்துக்கு உள்ளானது பற்றியெல்லாம் பேசப்பட்டுள்ளன. “எங்களை சுற்றி எல்லாமே சரியாக நிகழ்ந்த போது, கோவிட் 19 எங்கள் நாள்களை கடினமாக்கியது. மீண்டும் வாழ்வதற்கு, மீண்டும் அன்பு செலுத்துவதற்கு, மீண்டும் எங்களுக்கு பிடித்தமான விஷயத்தை (படப்பிடிப்பை மீண்டும் தொடங்க) செய்வதற்கு, எங்களுக்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கைக்கான ஒளிக்காக, எல்லோருடனும் சேர்ந்து நாங்களும் காத்திருந்தோம்.
கடினமான அந்த நேரங்களிலும், மக்கள் தங்களின் அன்பை எங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்! அந்த அன்பு, எங்களுக்கு வலிமையை, நம்பிக்கையை, மனஉறுதியை கொடுத்தது. அவற்றின் பலனாய், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினோம்!” போன்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.
வீடியோவின் இறுதியில், நடிகர் அஜித்குமார் பைக் வீலிங் செய்யும் மாஸாக காட்சியொன்று வருகின்றது. அதில் அஜித் பைக் ஓட்டி வருகையில் எதிர்பாராதவிதமாய் விபத்துக்குள்ளாவதை நம்மால் காண முடிகிறது. “வீழ்ந்த பின்பும் மீண்டெழுவோம்” என சொல்லும் விதமாக அசால்ட்டாக அஜித் மீண்டும் எழுந்து நடந்து வருகின்றார்.
அஜித்தின் இந்த அசாத்திய உழைப்பை பாராட்டும் விதமாக, “படக்குழுவுடனான உங்களுடைய ஒத்துழைப்புக்கு, கடின உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்கு… நன்றி அஜித் சார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஒரு ஸ்டண்ட் காட்சியே, படத்தின் மீதான பிரமிப்பை நமக்கு அதிகப்படுத்துகின்றது.
வீடியோவின் கடைசி ஃப்ரேமில், “நான்(ங்கள்) தடுமாறலாம், விழலாம். ஆனால்… மீண்டும் எழுவோம். போரிலிருந்து பின்வாங்காமல் இருத்தலே போதுமானது” என்ற மகாத்மா காந்தியின் வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வீழ்ந்தாலும் மீண்டெழும் விதத்தில் இந்த பொங்கல், அஜித் ரசிகர்களுக்கு ‘வலிமை’ பொங்கல்!