வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்: சூர்யா – ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம்

0
43

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில் வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.

சூர்யா – ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம்.

இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வியல் துயரங்களை திரையினூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக “ஜெய்பீம்” படக்குழுவினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கின்ற நோக்கத்திற்காகவும் தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான அக்னி குண்டத்தை திட்டமிட்டு நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்தியதிற்காக அப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா அவர்களுக்கும், இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு படைப்பாளனாக நானும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு “ஆட்டோ சங்கர்”, மாவீரன் வீரப்பனின் வரலாறான “சந்தனக்காடு”, கும்பத்து மனிதர்கள் பற்றிய “காயிதம்” என பல படைப்புகளை எவருக்கும் அஞ்சாமல் சமரசமற்ற நிலையில் படைப்பாக்கியிருக்கிறேன். ஒரு படைப்பு என்பது எப்போதும் தனது சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் புண்படுத்தி விடக்கூடாது. ஒரு கலவரத்தை படைப்பாக்கலாம். ஆனால் ஒரு படைப்பு ஒருபோதும் கலவரத்தை உருவாக்கி விடக்கூடாது. தமிழினத்தின் எதிரிகளாலும், சூழ்ச்சியாளர்களாலும் தமிழர் குடிகள் பிரிந்து இன்று ஆளுக்கொரு திசையில், வன்மம் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளனோ, போராளியோ அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர போராட்ட களத்தில் நிற்கலாம் அல்லது படைப்பு செய்யலாம். அதனை விட்டுவிட்டு மேன்மேலும் வன்மத்தை வளர்த்தெடுக்கின்ற நிலையில் படைப்புகளை செய்வதென்பது ஒருபோதும் அறமாகாது.

அந்தோணிசாமி என்கிற மிருகம் செய்தது ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது. ஆனால் நீங்கள் அதனையும் தாண்டி அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும், அக்னிகுண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்துவதென்பது அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி நீங்கள் செய்த மாபெரும் தவறு. தவறுதலாக நாட்காட்டி இடம் பெற்றுவிட்டது என படக்குழு சொன்னதாக ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. சிரத்தை எடுத்து அக்கினி குண்டத்தோடு 1995 ஆம் ஆண்டு என பதிவு செய்து சுவரில் மாட்டப்பட்ட நாட்காட்டி தவறுதலாக வந்துவிட்டது என்று இதற்கு மேலும் உங்களால் எப்படி பொய் சொல்ல முடிகிறது? மேலும் இந்த வழக்கில் நீதி கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த குரலற்றவர்களின் குரலாக இறுதிவரை உயிர் உருக அருகில் நின்ற கோவிந்தன் அவர்கள் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் எப்படி மறந்தீர்கள் அல்லது ஏன் மறைத்தீர்கள்?

சில நூற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் வடக்கே வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினரை அடித்துக்கொள்ள வைத்ததோடு மட்டுமல்லாமல் தெற்கே தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் இடையிலேயும் கலவரத்தை உருவாக்கி தமிழர் குடிகளுக்குள் நிரந்தர பகையினை உருவாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர் குடிகளின் ஒன்றுகூடலே தமிழினத்தின் தலைநிமிர்வு என்பதை இன்னும் கூட அறியாமலிருக்கும் இந்த கூட்டத்திற்கு நடுவே நீங்களும் உங்கள் பங்கிற்கு இது போன்ற செயல்களை செய்வதென்பது நேர்மையற்றது என்பதை உணர்ந்து கொண்டு சம்பந்தப்பட்ட நேர்மையற்றக் காட்சியினை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
05.11.2021.