ரூ.2000 விமர்சனம் – பொறுப்புணர்ச்சி கலந்த பொருளாதார, சமூக பாடம்
வழக்குரைஞர் பாரதி கிருஷ்ணகுமாரிடம் வித்தியாசமான வழக்கு வருகிறது. விவசாயி அய்யநாதனுக்கு இருபது வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறக்க, சந்தோஷப்படும் நேரத்தில் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனடியாக மருந்து வாங்கி வர மருத்துவர் கூறுகிறார்.அதற்காக அவசரமாக ஏடிஎம் மையத்திற்கு சென்று 2000 நோட்டை எடுத்து வருகிறார். மருந்து கடையில் அந்த நோட்டை கொடுக்க,அதில் எழுதியிருப்பதால் செல்லாத நோட்டு என்று மருந்துக்கடைக்காரர் 2000 நோட்டை திருப்பி கொடுத்து விடுகிறார். வங்கிக்கு எடுத்துச்சென்றாலும் அதை வாங்க மறுத்து விடுகிறார் வங்கி மேலாளர். இந்த தாமதத்தால் குழந்தை இறந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் அய்யநாதன் இவர்கள் அனைவரின் மேல் வழக்கு போடுகிறார். இவருக்காக வாதடும் பாரதி கிருஷ்ணகுமார் திறமையாக வாதாடி அனைவரையும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கிறார். இதனிடையே வழக்ககுரைஞரின் உதவியாளர் ருத்ரன் தன் மனைவி சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதற்காக மனைவியின் குடும்பத்தினர் மேல் வழக்கு போடுகிறார். இவரின் வழக்கும் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஷர்னிகா அபாரமாக வாதாடி குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுகிறார். இந்த இரு வழக்குகளின் தீர்ப்பு தான் படத்தின் க்ளைமேக்ஸ்.
இதில் பாரதி கிருஷ்ணகுமார் -பாலன்(வழக்குரைஞர்),ருத்ரன் பராசு -விக்னேஷ் (வழக்குரைஞர்),அய்யநாதன் -அப்புசாமி (விவசாயி), ஷர்னிகா-அஜீதா (வழக்குரைஞர்),கராத்தே வெங்கடேஷ்-ராமதாஸ்(வழக்குரைஞர்),தோழர் ஓவியா-நீதிபதி, தோழர் தியாகு-நீதிபதி என்று அனைவரும் திறம்பட வாதங்களை முன் வைத்து காட்சிகளை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் குறிப்பாக பாரதி கிருஷ்ணகுமாரின் அபரிதமான பேச்சு ஆற்றல் படம் முழுவதும் அசத்தி விடுகிறது.
இனியவனின் இசையும், பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவும், லட்சுமணன் படத்தொகுப்பும் படத்திற்கு பக்கபலமாக இருந்து சிறப்பாக பங்களித்துள்ளனர்.
புதிய ரூபாய்த்தாள்கள் அறிமுகத்தின் போது பேனா, பென்சில் ஆகியவற்றால் எழுதினால் செல்லாது என அறிவித்ததாக சொன்னாலும், அந்த பழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு சொன்னது உண்மையா? பொய்யா? என்ற ஆராயும் நிலைமையிலும் மக்கள் இல்லை. அதுமட்டுமின்றி ஏடிஎம் மையங்களில் எழுதிய நோட்டுக்கள், கிழிந்த நோட்டுக்கள், சாயம் போன நோட்டுக்கள் என்று பல கலந்து வருவதும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் புகார் அளிக்காமல் வங்கிகளுக்கு சென்று அல்லாடுவதையும் பல இடங்களில் நடக்கிறது. ஏடிஎம் மையங்களை நிர்வகிப்பதும், நிரப்புவதும் யார்? தவறு நடந்தால் யார் பொறுப்பு? என்ற கேள்விகளுக்கு விடை படத்தில் உள்ளது. இதை தௌ;ளத்தெளிவாக விளக்கமாகவும் நெத்தியடி போல் நெஞ்சில் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ருத்ரன்.
அதுமட்டுமில்லாமல் பரவலாக நடந்து வரும் ஆணவக் கொலைகளின் பின்னணியையும் இடைசறுகலாக சொல்லி தலை நிமிரும் வண்ணம் பல வசனங்கள் படத்திற்கு பலம். படம் முழுவதும் சட்ட வசனங்கள் நிறைந்து நீதிமன்ற வளாகத்தில் நடப்பதால் கொஞ்சம் தோய்வும் சில இடங்களில் இருக்கிறது.
மொத்தத்தில் கோ. பச்சியப்பன் தயாரித்திருக்கும் ரூ.2000 அனைவருக்கும் கற்றுத்தரும் அறிய பொறுப்புணர்ச்சி கலந்த பொருளாதார, சமூக பாடம்.