ரஜினியுடன் பேசிய போன் ஆடியோ லீக் : பிரபல இயக்குநர் வருத்தம்…

0
140

ரஜினியுடன் பேசிய போன் ஆடியோ லீக்: பிரபல இயக்குநர் வருத்தம்…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரீதுவர்மா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படமும் வெளியாகாமல் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பின் ரஜினி அவருடன் பேசிய போன் ஆடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலானது.

அந்த ஆடியோவில் படம் சூப்பர் என பாராட்டி பேசியுள்ள ரஜினி, இவ்வளவு நாட்கள் கழித்து படத்தை பார்த்ததற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். மேலும் முடிந்தால், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி அதில் கேட்டிருக்கிறார்.

 

இந்நிலையில் ரஜினியுடன் பேசிய ஆடியோ கசிந்தது பற்றி வருத்தம் தெரிவித்து தேசிங்கு பெரியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வாழ்த்து சொன்ன எல்லாருமே “என்கிட்டயே தலைவர் பேசின மாதிரி அவ்வளோ சந்தோஷம்னு சொல்றாங்க”. இவ்வளவு அன்பு காட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. அந்த உரையாடல் லீக் ஆனது எனக்கு சந்தோஷம் இல்லை. அது மிகவும் பர்சனல் கால். என்னுடைய டுவிட்டில் கூட நான் தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் இது துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. அன்பு மற்றும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்” என தேசிங்கு பெரியசாமி கூறி உள்ளார்.