யூடியூப் பதிவுகளை அடித்து நொறுக்கி மேலும் ஒரு புதிய சாதனையை படைத்த ரவுடி பேபி!
தனுஷ், சாய் பல்லவி, வர்லக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 2018 ஆண்டு இறுதியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ வீடியோ பாடலை யூடியூப்பில் வெளியிட்டனர், அப்போது அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்று Youtube -ல் 200 மில்லியன் நிகழ்நேர பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை படைத்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்தார். இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி கால் நடுங்க, பிரமாதமாக நடனமாடியுள்ளனர். தனுஷ் எழுதிய பாடல் வரிகளை தனுஷ் மற்றும் டீ பாடியுள்ளனர்.
இது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே உடனடி ஹிட் பாடலாக அமைந்தது, இறுதியில் பாடல் யூடியூப் பதிவுகளை முறியடிக்கத் தொடங்கியது. ரவுடி பேபியின் வீடியோ பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்தே சாதனைகளை படைத்து வந்தது. தொடர்ந்து, பாடல் Youtube இல் 500 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மிகப்பெரிய மைல்கல்லைக் கடந்தது. மேலும் இந்த சாதனையின் மூலம், 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப்படப் பாடலாக ரவுடி பேபி ஆனது. 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளும், 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளும், 157 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளும் எட்டியது.
தற்போது, ரவுடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 1.5 பில்லியன், அதாவது 150 கோடி பார்வைகளைக் கடந்து மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துதுள்ளது.