‘மீரா ஜாக்கிரதை’ : பாபி சிம்ஹா புகார் – தயாரிப்பாளர் பதிலடி

0

பாபி சிம்ஹா நடிப்பில் ‘கோ 2’ சமீபத்தில் வெளியானது. சரத் இயக்கியுள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்போது இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாபி சிம்ஹாவின் ‘மீரா ஜாக்கிரதை’ என்னும் படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் தான் நடிக்க நடிக்கவில்லை என்று பாபி சிம்ஹா சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். மேலும் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘மீரா ஜாக்கிரதை’ படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அந்தோணி எட்வார்ட் ஆகிய நான் ‘மீரா ஜாக்கிரதை’ படத்தை தயாரித்துள்ளேன். இப்படத்தை ஜி.கேசவன் இயக்கியுள்ளார். மகேஸ்வரன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இயக்குனர் ஜி.கேசவனுக்கு இணை இயக்குனராக பணியாற்ற சதீஷ் என்பவரை நியமித்தோம். அவர்தான் பாபி சிம்ஹாவை அழைத்து வந்து இந்த படத்தில் நடிக்க வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படப்பிடிப்பில் மது அருந்திவிட்டு, போதையில் இணை இயக்குனர் சதீஷ், பாபி சிம்ஹா மற்றும் சிலர், வாய்ப்பளித்தவர் என்றும் பாராமல் இயக்குனர் ஜி.கேசவனை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி அடிக்கவும் முயன்றனர்.

அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சதீஷ் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் முழு நகலும் என்னிடம் உள்ளது. அதன் CSR NO.(216/11).

இச்சம்பவத்தால் இயக்குனர் ஜி.கேசவன் மனமுடைந்து மன உளைச்சலுக்கும், உடல நல குறைவுக்கும் ஆளானார். என்னுடைய பணமும் முடங்கியது. சில வருடங்களுக்குப் பிறகு மேற்கொண்ட பணிகளை முடித்து வருகிற 27ம் தேதி தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுகிறேன்.

இந்த சூழ்நிலையில், ‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் நடிக்கவே இல்லை என்று எங்கள் மீது பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் நான் கடுமையான மன வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன்.

நான் இதற்குமுன் ‘பேசாமல் பேசினால்’ என்ற படத்தை தயாரித்து சொந்தமாக வெளியிட்டுள்ளேன். மேலும் ‘ஏன் இந்த மயக்கம்’ படத்தை அடுத்த மாதம் திரையிட திட்டமிட்டுள்ளேன்.

இச்சூழ்நிலையில் எனது பெயருக்கும், எனது கம்பெனி பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரித்து, இம்மாதம் 27ம் தேதி எங்களது படம் ‘மீரா ஜாக்கிரதை’ வெளி வருவதற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி தயாரிப்பாளர் சங்கத்திடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.