மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி; தனுஷின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

0
7

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி; தனுஷின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, நடிகர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ், தனுஷின் 41 வது திரைப்படமான ’கர்ணன்’ படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். படத்தில் தனுஷுடன் இணைந்து, ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நட்டி நடராஜன், கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய வலு சேர்த்திருந்தது.

கொடியன்குளம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தைப் பார்த்த, ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் கர்ணனை கொண்டாடி தீர்த்தனர். படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அசுரன் படத்துக்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்ணன் படத்துக்கும் தேசிய விருது கிடைக்கும் என விமர்சகர்களும், ரசிகர்களும் அவரது நடிப்பை பாராட்டினர்.

இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் நடக்கிறது, அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.