மிருகா விமர்சனம்

0
23

மிருகா விமர்சனம்

எந்த நகரத்தில் இருந்தாலும் அங்கே சென்று குழந்தைகளுடன் தனிமையில் வாழும் பணக்கார பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பதே ஸ்ரீகாந்தின் வேலை. தன் கைவரிசையை காட்டிவிட்டு கம்பி நீட்டுவதில் கை தேர்ந்தவர். அதே போல் ஒரு குடும்பத்தை தீ வைத்து எரித்து விட்டு தப்பிக்கும் போது பக்கத்து வீட்டு பணக்கார பெண்ணிடம் மாட்டிக் கொள்கிறார். அந்தப் பெண் தனக்கு ஒரு செயலை செய்தால் போலீசிடம் மாட்டி விட மாட்டேன் என்று மிரட்டி ஸ்ரீகாந்தை பணிய வைக்கிறார். ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் அக்காவான ராய் லட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சொத்தை அபகரித்து அந்த பெண்ணிடம் கொடுக்க முயற்சி செய்கிறார். இவர்களிடமிருந்து ராய் லட்சுமி எப்படி தப்பித்தார்? ஸ்ரீகாந்த் ராய் லட்சுமியை ஏமாற்றினாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே க்ளைமேக்ஸ்.

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்திலும் இவர்களுடன் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

அருள் தேவ் இசையில் பாடல்களுடன் பின்னணி இசையும், எம்.வீ.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவும் படத்தின் திகிலான காட்சிகளுக்கு உத்திரவாதம்.

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் குற்ற பின்னணி கொண்ட த்ரில்லர் கதையை கையிலெடுத்து தன்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். முதல் பாதியில் தடையில்லாமல் எதிர்பார்த்தபடி செல்லும் கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து வேறு பாதையில் செல்கிறது, க்ளைமேக்சில் புலி காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் சில காட்சிகளில் கத்திரி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்  ஜாக்குவார் ஸ்டுடியோ சார்பில் பி வினோத் ஜெயின் தயாரித்திருக்கும் மிருகா த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்து பயமுறுத்த முயற்சித்திருக்கிறது.