மிக மிக அவசரம் திரை விமர்சனம்

0

மிக மிக அவசரம் திரை விமர்சனம்

ரேட்டிங்

இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த கருவை மையமாக கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்”.

ஒரு அழகிய இளம் பெண் போலீஸ் ஸ்ரீபிரியங்கா. அவள் அழகு மீது போலீஸ் அதிகாரிக்கு ஒரு ஈர்ப்பு. ஸ்ரீபிரியங்காவை அடைய முயற்சிக்க அவள் மறுக்கிறாள். உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் என கூறி போலீஸ் அதிகாரி பல தொல்லைகளை பெண் போலீசுக்கு கொடுக்க அதனால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் கொதிப்படையும் சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி தன் நண்பரான போலீஸ் அதிகாரி முத்துராமனை வைத்து பந்தோபஸ்து என்ற பெயரில் ஒரே இடத்திலே ஸ்ரீபிரியங்காவை பாலத்தின் மீது பகல் முழுவதும் நிற்கவைத்து படாத பாடு படுத்துகிறார். அப்போது ஸ்ரீபிரியங்கா அனுபவிக்கும் இக்கட்டான பிரச்சனைகளையும், வலியையும் அவலங்களைச் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘மிக மிக அவசரம்” கதை.

கதையின் நாயகி பெண் போலீசாக நடித்துள்ள ஸ்ரீ பிரியங்காவிற்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் மனதில் பதிந்து விட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பெண் போலீசின் நிலைமையையும், வலியையும், வேதனையையும் முக உணர்வு மற்றும் உடல் அசைவுகள் மூலமும் சிறப்பாக வெளிப்படுத்தி முழு கதையையும் நகர்த்தி இருப்பது சிறப்பம்சம்.குடிகார மாமனையும். அவரது மகளையும் காப்பாற்றும் தாயாகவும், தன் காதலனிடம் இக்கட்டான நிலையை விவரிக்கும் காதலியாகவும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ள ஸ்ரீ பிரியங்காவுக்கு மிக பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

குரூர புத்தி கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியாக முத்துராமன் பார்வையிலேயே கொல்லும் கதாபாத்திரம் படம் பார்க்கும் போது மக்கள் அனைவருக்கும் அவர் மீது கோபம் வரச்செய்கிறது. இது தான் அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

ஈ.ராமதாஸ், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) மற்றும் உயர் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆகியோர் கதை ஒட்டத்திற்கான கன கச்சிதமான தேர்வு.

பாலபரணி ஒளிப்பதிவு, கதை, வசனம் இயக்குநர் ஜெகன்நாத், இஷான்தேவ் இசை, ஆர்.சுதர்நன் எடிட்டிங், என்.கே.பாலமுருகன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்தப்படங்களில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை விரிவாக அலசி, அவர்கள் படும் வேதனைகளையும், இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் கஷ்டப்படும் காட்சிகள் ஒவ்வொன்றையும் உணர்வுகளோடு செதுக்கி இயற்கையே உதவி செய்வது போல் திரைக்கதையமைத்ததன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. உண்மையான டைட்டிலுக்கேற்ற கதை இந்தப் படம் என்பது படம் பார்ப்போர் உணரும் வண்ணம் காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ‘மிக மிக அவசரம்” சிறந்த கதையம்சம் கொண்ட பெண்களின் அவஸ்தையை மையமாக கொண்டிருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டிய படம் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

நம்ம பார்வையில் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.