மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

0
9

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதனிடையே முன்னணி ஓடிடி தளங்கள் ‘மாஸ்டர்’ படத்தைக் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித்குமார், “மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியராக நடித்திருக்கும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ், நடிகர் நாசர், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியான ‘மாஸ்டர்’ டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.