மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரை விமர்சனம்

0

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரை விமர்சனம்

ரேட்டிங்

ஊருக்குள் அடி தடி வெட்டுக்குத்துனு செம்ம கெத்தான தாதாவாக உலா வருபவர் மார்க்கெட் ராஜா(ஆரவ்). இவர் ஒரு அமைச்சருக்கு அடியாளாக இருந்து வருகிறார். இவருடைய தாய் ராதிகா, ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால், ஆரவ்வோ, தாய் ராதிகாவை மதிக்காமல் இருக்கிறார். குறிப்பிட்ட கட்சியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவிற்கு ஆதரவாக ஆரவ் செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் மார்க்கெட் ராஜாவை தூக்கினால் தான் நாம் முன்னேற முடியும் என மற்றொரு அமைச்சர் முடிவெடுக்கின்றார். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாள் ஒரு கல்லூரியில் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவ், காவ்யா மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் மிகவும் கோழையான மாணவர் ஒருவர் காவ்யாவை காதலிக்கிறார். இதற்கிடையில் போலிஸ் இருவரை ஆரவ் பிடித்து வைக்க இனி மார்க்கெட் ராஜவை சும்மவிடக்கூடாது என போலிஸார் என்கவுண்டர் ப்ளான் செய்கின்றனர். என்கவுண்டரின் போது கோழையான மாணவர் சிக்கி இறக்கிறார். மேலும் அவரின் ஆவி, ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆரவ் கேங்ஸ்டர் ரோலில் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார். உடற்கட்டு, ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். உடம்பிற்குள் ஆவி சென்றவுடன் காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

தாயாக வரும் ராதிகா, வித்தியாசமான நகைச்சுவை கலந்த வேடத்தில், புல்லட் ஓட்டுவது சுருட்டு பிடிப்பது என தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபேஷனாக வடிவமைத்துள்ள கதாபாத்திரத்தில் நிகிஷா பட்டேல் கவர்ச்சியால் ரசிகர்களை உசுப்பேற்றுகிறார்.

அரசியல்வாதிகளாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி, நாசர், விஹான், ரோகினி, ஆதித்யா, மதன் பாபு, சாம்ஸ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதையின் ஒட்டத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள் இசையமைப்பாளர் சைமன் கே.கிங் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.குகன். ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்குனர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியவர் சரண். நல்ல ஜாலியான கண்டெண்ட்டான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போல் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம் சரண்.

சில வருட இடைவெளிக்கு பின் அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

மொத்தத்தில் சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன்; தயாரித்துள்ள ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்” வசூலில் கல்லா கட்டும்.

நம்ம பார்வையில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.