மாயோன் விமர்சனம் : பழங்கால ஞானம் கலந்த வியப்பூட்டும் திருப்பங்களுடன் கூடிய புதிய அனுபவத்தை தரும் மர்மமான திரில்லர் ரேட்டிங் 3/5

0
606

மாயோன் விமர்சனம் : பழங்கால ஞானம் கலந்த வியப்பூட்டும் திருப்பங்களுடன் கூடிய புதிய அனுபவத்தை தரும் மர்மமான திரில்லர் ரேட்டிங் 3/5

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் மாயோன்.படத்தை இயக்கியவர் என்.கிஷோர்.
சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேராடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை – இளையராஜா, ஒளிப்பதிவு ராம்பிரசாத், எடிட்டிங் – ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ், கலை-பாலசுப்ரமணியன், பாடல்கள்- இளையராஜா, சண்டை-பில்லா ஜகன், மக்கள் தொடர்பு- யுவராஜ்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாயோன் மலை என்ற பகுதியில் ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. இந்திய தொல்லியல் துறை சார்பாக அந்த கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய குழு ஒன்று செல்கின்றது. கோவிலின் ரகசிய அறையில் புதையல் இருப்பது அந்தக் குழுவுக்கு தெரிய வருகிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வரும் நாயகன் சிபி சத்யராஜ் சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடியுடன் கூட்டணி வைத்து கோவில் புதையல்களை வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள். அதே சமயம் இந்த கோவிலுக்குள் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், இரவில் கோவிலில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், இரவு வேளையில் அந்தக் கோவிலில் இருப்பவர்களுக்கு ஆபத்து எனவும் அந்த ஊர் மக்களிடையே நம்பிக்கை இருந்துவருகிறது. இதனிடேயே சிலை கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வருகிறது. இச்சூழலில் தொல்லியல் குழு அந்த புதையலை எப்படி மீட்கிறார்கள், கொள்ளையர்கள் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே மாயோன் படத்தின் கதை.

தொல்லியல் துறையில் பணி புரிபவர்களாக சிபி சத்யராஜ், துறைசார்ந்த அறிவு, எதிரியின் மனதை ஏமாற்றுவதென்ற சமயோசித புத்தி, அதிரடிச் சண்டை என அர்ஜூன் மணிமாறனாக கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கல்வெட்டுகளைப் படிக்கக் கூடிய (Epigraphist)) அஞ்சனாவாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன் கதை பயணத்திற்கு உதவியுள்ளார்.

அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஊர் தலைவராக வரும் ராதாரவி, மாரிமுத்து, பகவதிபெருமாள் பக்ஸ், வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆகியோர் அனுபவ நடிப்பின் மூலம் தங்களது பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு பலமாக இருக்கிறார்கள்.

படத்தின் கதைக்களம் மாயோன் மலை, கிருஷ்ணர் கோயில் ஆகிய இடங்களை மட்டுமே சுற்றி நகர்கிறது. கலை இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் உருவான பிரம்மாண்டமான பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை, ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டி பெரும்பலம் சோர்த்துள்ளது. ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் எடிட் ஓகே.

பண்டைய தமிழர்களின் ஆன்மீக அறிவியலும் சிறுவர்களுக்கு பிடித்த அறிவியல் மாயாஜாலங்களும் சேர்த்து கோயிலுக்குள் இரவில் தங்குபவர்களுக்கு ஏற்படும் மாயத்தோற்றங்களுக்கான காரணங்களை அழகாகப் உருவாக்கி அடுத்த பாகத்திற்கான லீட்டையும் கொடுத்து முடித்துள்ளார், திரைக்கதை ஆசிரியரும் தயாரிப்பாளருமான அருண்மொழி மாணிக்கம்.

சற்று சிரமமான கதைக்களம் என்றாலும் புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல், புதையல் வேட்டை என பரபர திகில் திரைப்படமாக எந்த அளவிற்கு விறுவிறுப்பைக் கொடுக்க முடியுமா அதைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர்.

மொத்தத்தில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் மாயோன் பழங்கால ஞானம் கலந்த வியப்பூட்டும் திருப்பங்களுடன் கூடிய புதிய மாய அனுபவத்தை தரும் மர்மமான திரில்லர்.