மலையாள சினிமாவில் பாலியல் புகார் எதிரொலி – ‘அம்மா’ அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா – செயற்குழு கலைப்பு!
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி, ”இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக்கொள்ள தொடங்கி உள்ளனர். திரை உலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்னைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப்போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இதுதொடர்பாக நடிகர் சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இந்தப் பிரச்னைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன. நீங்கள் (ஊடகம்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழிநடத்துகிறீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.