மறக்குமா நெஞ்சம் : மறக்கவே முடியாத அனுபவம்.. ”நானே பலி ஆடு ஆகிறேன்..” – ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்!
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விரிவான விசாரணை செய்ய தாம்பரம் காவல் துறை ஆணையர் அமல்ராஜூக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஏ.ஆர்.ரகுமான் அவ்வப்போது, தனது இசை கச்சேரியை ரசிகர்களுக்காக நடத்தி வருவார். அந்த வகையில் கடந்த மாதம் 12-ம் தேதி சென்னை, நந்தனத்தில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் இவரது இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் ஆவலுடன் வந்தனர்.
ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும் சோகத்தில் இருந்த ரசிகர்ளுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து இந்த இசை நிகழ்ச்சி நேற்று சென்னை பனையூரில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்கள் கோல்டு, பிளாட்டினம், டைமண்ட் உள்ளிட்ட பாஸ்கள் வைத்திருந்தனர்.
இதற்காக ஒவ்வொருவரும் ரூ.500-ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுத்து இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்தனர். ஆனால் நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பாஸ் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வெளியே நிற்க வைக்கப்பட்டனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிக்கு உள்ளானர்.
மேலும் தங்கள் கண்டனங்களை எழுப்பினர். நேற்று இரவு இந்த நிகழ்வால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் இதனால் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் ஏ.ஆர்.ரகுமானுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாகவும் அமைந்திருந்தது. ரசிகர்கள் வெளியே காத்திருக்க, உள்ளே அவர் பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.
It was worst concert ever in the History #ARRahman #Scam2023 by #ACTC. Respect Humanity. 30 Years of the Fan in me died today Mr. #ARRAHMAN. #MarakkumaNenjam Marakkavey Mudiyathu, . A performer in the stage can’t never see what’s happening at other areas just watch it. pic.twitter.com/AkDqrlNrLD
— Navaneeth Nagarajan (@NavzTweet) September 10, 2023
இதனால் வெளியே காத்திருந்த ரசிகர்கள் மேலும் கொந்தளித்தனர். இதன் காரணமாக பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு இணையதளம் வாயிலாக கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகள் வீணாய் போனது என்பதால் கிழித்தெறிந்து தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இந்த விவகாரம் பூதகரமாய் ஆன நிலையில், தற்போது இதுகுறித்து விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக இதுபோன்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் ஏஜென்சியிடம் வழங்கப்படும். அவ்வாறாக ஒரு ஏஜென்சிக்கு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் இதற்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஏஜென்சி செய்த தவறு. ஆனால் இது அவரது இசை நிகழ்ச்சி என்பதால் அவர் மேல் பழி விழுந்துள்ளது என்று ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு இந்த விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் கூடுதலாக ரசிகர்கள் வந்ததால் தான் இதுபோன்ற பிரச்னை உள்ளதாக அந்த ஏஜென்சி விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது X வலைதள பக்கத்தில், மன்னிப்பு கேட்டதோடு டிக்கெட் வாங்கி இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர் [email protected] என்ற இ-மெயிலுக்கு டிக்கெட்டின் நகலை அனுப்புமாறும், தங்கள் குழு அதற்கு விரைவில் பதிலளிப்பார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், “சிலர் என்னை GOAT என்கின்றனர். ஆனால் மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன். குழந்தைகள், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும்.” என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விரிவான விசாரணை செய்ய தாம்பரம் காவல் துறை ஆணையர் அமல்ராஜூவுக்கு, சென்னை டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.