மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள அப்பாவின் உடல்நிலை மெல்ல மெல்ல தேறிவருகிறது – எஸ்.பி.பியின் மகன் சரண் விளக்கம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து செயற்கை சுவாச முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்தநிலையில், இன்று மதியம் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அளித்த விளக்கத்தில், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளது. செய்ற்கை சுவாச சிகிச்சையில் இருந்துவருகிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘நேற்று, தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. நேற்றைவிட இன்று அவரது உடல்நிலை சீராக உள்ளது. காலையிலிருந்து நிறைய ஃபோன்கால்கள் வந்தன. எதற்கு பதில் அளிக்காததற்கு வருத்துகிறேன். அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. செய்ற்கை சுவாத்தில் இருக்கும் அவரது நுரையீரல் சிறப்பாக செயல்படுகிறது.
மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை மெல்ல மெல்ல தேறிவருகிறது. அவரது உடல்நிலை மெதுவாகத்தான் குணமடையும். உங்களுடைய வேண்டுதல்கள் நிச்சயம் உதவும். உங்களுடைய அன்புக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.