மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’?

0
86

மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’மோதவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் நிதி பிரச்னை, கொரோனா பரவல் போன்றவற்றால் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்து தற்போது ‘அயலான்’ வெளியீட்டிற்கு தயாராய் உள்ளது. ஆனால், இன்னும் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை. சிவகார்த்திகேயனின் ‘டான்’ வரும் மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘அயலான்’ படத்தை அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநாளில், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. சோழர்களை மையப்படுத்திய ‘பொன்னியின் செல்வன்’ படமும் வேற்று கிரகவாசி கதைக்களத்தைக் கொண்ட ‘அயலான்’னையும் திரையில் காண்பது ரசிகர்களுக்கு பேரனுபவமாய் இருக்கும் என்பது நிச்சயம்.