மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ஆயிஷா
‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.
பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.
மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை. பிரபல நடிகரும் ,இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி. அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தோ -அரேபிய கூட்டுத்தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது. இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.