‘பொன்மனச் செல்வர்’ விஜயகாந்த் மறைவு! : திரையுல பிரபலங்கள் இரங்கல்!

0
242

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், அவரோடு நெருங்கி பழகிய திரையுல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா:

“எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கிறது. விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத்
துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

கவிஞர் வைரமுத்து:

“எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார். கலைஞர், ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல் செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

நடிகர் சிவகுமார்:

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர்.. ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர். நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். ‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

நடிகர் விக்ரம்:

மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரான கேப்டன் விஜயகாந்த் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் கேப்டன்.

கேப்டன் விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

பாலிவுட் நடிகர் சோனு சூட்:

“கள்ளழகர் திரைப்படம் தான் எனது முதல் படம். இது எனக்கு லெஜண்ட் விஜயகாந்த் சார் கொடுத்த பரிசு, நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். RIP கேப்டன்”

நடிகை த்ரிஷா:

“RIP கேப்டன்.. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்வேன்”

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்:

“அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி”

இயக்குநர் மாரி செல்வராஜ்:

“அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். உங்களை மிஸ் செய்கிறோம் கேப்டன்”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்:

“சிறந்த நடிகர், தலைவர், சிறந்த மனித ஆன்மா இப்போது இல்லை..நீங்கள் என்றும் அழியாமல் இருப்பீர்கள், தமிழ்த் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் புன்னகையுடன் வாழ்வீர்கள். எங்கள் மதுரை மண்ணின் மைந்தன்… RIP சார்!”

நடிகர் நெப்போலியன்:

“தேமுதிகவின் தலைவரும், நமது அன்பு அண்ணன் விஜய்காந்த் மறைவு செய்தி
கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம். அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் வாழ்வில் மறக்காது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!!

நடிகர் தியாகராஜன்:

அதில், “இன்று காலையில் என்னை ஒரு அதிர்ச்சியான செய்தி எழுப்பியது. அதிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் ஆகியது. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்.மனித நேயம் கொண்டவர்.தமிழ் மீது அதீத பற்று கொண்டவர்.சினிமா துறைக்காக நற்செயல்கள் பல செய்த மாமனிதர். புதிது புதிதாக இயக்குநர்கள் பலரை உற்சாகப்படுத்தும் விதமாக அதற்காக தனது அலுவலகத்திலேயே ஒரு குழுவினை அமைத்து அவர்களுக்கு உணவு அளித்து நல்ல கதைகளை கேட்டு அவர்களுக்கு வாப்பு அளித்த மாமனிதர்.

திரைப்பட கல்லூரியில் இருந்து வரும் மாணவர்கள் பலரை ஊக்குவித்து தமிழ் திரையுலகிற்கு புதிய இயக்குநர்கள் பலரை அறிமுகப்படுத்தியவர் அவர்.யாருக்கும் இந்த அளவு துணிச்சல் வராது.அதிலும் ஒரு வருடத்திலும் 14 படங்கள் நடித்து வெளியிடுவார். இது மிகப்பெரிய ஒரு சாதனை. இதற்கு காரணம் அவர் இயக்குநர்களை அணுகிய முறைதான்.” என்று உருக்கமாக பதிவு செய்தார்.

நடிகர் சிங்கமுத்து:

“விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்பட உலகில் ஒரு இதயம் போன்றவர். அதாவது உண்மையான இதயம் கொண்ட மனிதர். ஏழை எளிய மக்கள், இயக்குநர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அரவணைத்தவர். அருமையான தர்ம குணம் படைத்தவர். எப்பொழுதும் மற்றவர்களுடைய மனது புண்படும் வகையில் எதையும் கூறமாட்டார். ஆறுதல்தான் கூறுவார். எதிர்காலத்திற்கு உண்டான வழியையும் காட்டுவார். இதுபோன்ற மனிதர்கள் பிறப்பது அரிது. அவர் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்”.

இயக்குனர் சீனு ராமசாமி:

விஜயகாந்த் குறித்து நம்மிடையே பேசியபொழுது “நான் துணை இயக்குனராக இருந்த பொழுது, எங்கள் அலுவலகத்திற்கு பெரியவர் ஒருவர் வந்தார். என்னிடம் அவர், ‘கேப்டன் விஜயகாந்த் குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் தருவார் என கேள்விபட்டேன்’ என்று சொல்லி உதவிகேட்டார். நான் உடனே அப்பெரியவரை விஜயகாந்த்தை பார்க்க கூட்டிச்சென்றேன். பெரியவர் கேட்டு வந்த தொகை மிகவும் குறைவு. விஜயகாந்த் அந்த பெரியவருக்கு அதிகமாகவே தந்தார். அதை அப்பெரியவர் என்னிடம் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்”.

நடிகர் – இயக்குனர் சமுத்திரக்கனி:

“கேப்டன். நான் சமுத்திரக்கனி பேசுகிறேன். உங்களது மனதிற்குதான் ’நெறஞ்ச மனசு’ என்று தலைப்பு வைத்தேன். உங்களோடு பயணப்பட்ட அந்த 72 நாட்கள் மாபெரும் சக்தியோடு பயணபட்ட நாட்களாக பசுமையான நினைவுகளாய் இன்னும் மனதில் உள்ளது. இன்று நீங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அதை எனது மனம் ஏற்க மறுக்கிறது.என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பார். அவரது ஆத்தும சாந்தி அடைய நான் இறைவனை பிராத்திக்கிறேன். எங்களுக்கு உள்ளே நீர் இருக்கிறீர் கேப்டன். உங்களது நல்ல எண்ணம், இந்த சமூகத்தின் மீது நீங்கள் கொண்ட பார்வை என்று எல்லாமே நான் நன்கு அறிவேன். அதை நாங்கள் பின்பற்றுகிறோம்.”

நடிகர் மோகன் லால்:

விஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் மோகன் லால் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயம் செல்கிறது. ஓம் சாந்தி”.

நடிகர் சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்”

நடிகர் விஜய்சேதுபதி:

கேப்டனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.

நடிகர் இளவரசு:

நடிகர் இளவரசு வேதனை தெரிவித்துள்ளார். அவர் நம்மோடு பேசுகையில், “விஜயகாந்த் அவர்கள் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் ஏனோதானோ என்றோ பட்டும் பாடாமலோ இருக்க மாட்டார். எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபாட்டோடு செய்வார். தன்னை நம்பி வருபவர்களுக்கு நம்பிக்கை தருவார். ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால் பின் விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டார். அவமானங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதை எதிர்த்துப் போராடி வளர முடியும் என்றால் அதற்கு உதாரணம் விஜயகாந்த்தான்”.

இயக்குநர் பேரரசு:

விஜயகாந்த்தின் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. அவரின் தனிப்பெரும் சிறப்பு என்னவென்றால் எந்த அளவிற்கு ரசிகர்கள் அவரை நேசிக்கிறார்களோ அதை விட பல மடங்கு அவர் ரசிகர்களை நேசிப்பார். முழுக்க முழுக்க மக்களை நேசித்த அரசியல்வாதி அவர். சுயநலமாக இல்லாமல், பதவி ஆசை இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை படைத்தவர். இதுதான் மற்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். விஜயகாந்த் என்றாலே வயிறார உணவு அளிப்பார் என்று பலரும் கூறுவர். அது உண்மைதான். படப்பிடிப்பில் கூட பல முறை எங்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இப்படி மற்றவர்களுக்கு உணவளித்து அதை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடையும் மனிதர் அவர். எனவே நல்ல ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம்.”

நடிகை சி.ஆர்.சரஸ்வதி:

“உதவி வேண்டுமென்ற செய்தி அவர் காதுக்கு போனல் போதும். அது எந்த மாதிரியான உதவியாக இருந்தாலும் முதலில் கூப்பிட்டு செய்யக் கூடியவராக கேப்டன் விஜயகாந்த் இருந்தார். உண்மையிலேயே இது மிகப்பெரிய இழப்பு அரசியல் வாழக்கையிலும் திரை வாழ்க்கையிலும் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தார். கம்பீரமான ஒரு மனிதர் இன்று அவரை இழந்து நிற்கிற அவரது குடும்பத்தாருக்கும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இயக்குனர் எஸ்பி. முத்துராமன்:

விஜயகாந்த் சிறந்த நடிகர் மட்டுமல்ல, மனிதாபிமானமுள்ளவர், உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே செய்து கொடுக்கும் தன்மை கொண்டவர். நடிகர் சங்கத்தை இவ்வளவு சிறப்பாக கொண்டுவர அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

நடிகர் தியாகு:

விஜயகாந்த் அன்புக்கு ரொம்ப ஏங்குவார். யாரிடமும் லேசுல பழக மாட்டார். ஆண்டவன் அவரோட பழகுற வாய்ப்ப கொடுத்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன். சில விசயங்களை வெளியில சொல்ல முடியாது. நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார். யாரா இருந்தாலும் சரி, கஷ்டம்னு வந்துட்டா உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவரே”.