”புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல” – ‘மெய்யழகன்’ இயக்குனருக்கு கார்த்தி புகழாரம்!
‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
“96 எல்லோருக்கும் பிடித்த படம். கதை, உரையாடல் என ஒவ்வொரு விஷயத்தையும் பிரேம்குமார் பார்த்து பார்த்து இழைத்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு ஒரு நாள் ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் தான், பிரேம்குமார் இப்படி மெய்யழகன் படத்திற்காக பிரேம் ஒரு கதை வைத்திருக்கிறார் என என்னிடம் கூறினார். உடனே அவரை நானே நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். 96 படம் வெளியான பிறகு இந்த கதைக்காகவே ஆறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் பிரேம் குமார். எப்படி அவரை தயாரிப்பாளர்கள், மற்ற ஹீரோக்கள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. இதிலிருந்தே அவர் புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி பொருட்காட்சியில் இருக்கும் ஒரு அரிய பொருளை போன்றவர் அவர்.
இந்த ஸ்க்ரிப்ட்டை படிக்கும்போதே எனக்கு கண்ணீர் கொட்டியது. அனேகமாக கோவிட் சமயத்தில் இந்த கதையை பிரேம் எழுதியிருப்பார் போல. எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் என சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்கு செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது. அந்த அளவிற்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். எல்லோரும் இந்த படத்தில் எப்படி நடித்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு கமர்சியலான படம், இதில் ஏன் நான் நடிக்க கூடாது ? கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார் அதற்கடுத்து இப்போது இந்த மெய்யழகன் படத்தில் தான் பல நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில்ல் கலந்து கொண்டேன். ஆனால் இதில் சண்டைக்காட்சி ஒன்று கூட இல்லை.
நானும் அர்விந்த்சாமி சார் பேசும்போது கூட இந்த காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை அப்படியே குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம். படம் முழுவதும் அத்தான் அத்தான் என அரவிந்த்சாமியை டார்ச்சர் செய்யும் ஒரு கதாபாத்திரம் எனக்கு. திண்டுக்கலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கே உள்ள பேமஸான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை 8 மணிக்கே பிரியாணி வாங்கி கொடுத்து அசத்தினார்.
96 படத்தின் காதலே காதலே பாடல் இப்போதும் பலரது ரிங்டோன் ஆக இருக்கிறது. அதுபோல மெய்யழகன் பாடலையும் ஊருக்குப் போகும்போது கேட்டுக்கொண்டே போவார்கள். இந்த பாடலுக்கு கமல் சாரே ஏற்படுத்திய வேல்யூவுக்கு நன்றி. ராஜா சார் காதல் இல்லாமல் பிரேம்குமார் கதையை எழுதவே மாட்டார்.. இதிலும் அது நடந்திருக்கு” என்று கூறினார்.