பிரான்மலை விமர்சனம் ரேட்டிங் 3/5

0

பிரான்மலை விமர்சனம்

ரேட்டிங் 3/5

செல்வாக்கும், செல்வமும் நிறைந்த பிரான்மலையில் வட்டி தொழில் செய்யும் கராரான அடாவடி பெரிய மனிதர் வேல ராமமூர்த்தி. இவரின் பட்டதாரி மகன் வர்மன் அமைதியான குணமும், அன்பும் நிறைந்தவர். வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் மகன் வர்மனை கோவையில் வேலை செய்ய அனுப்புகிறார். அங்கே வர்மன் அனாதை இல்லத்தில் வளரும் கிருத்துவ பெண்ணான நேஹாவின் இளகிய மனதும், பண்பும் பெரிதும் கவர காதலிக்க தொடங்குகிறார். முதலில் மறுக்கும் நேஹா பின்னர் வர்மனின் நல்ல குணம் பிடித்து போக காதல் வளர்கிறது. இதனிடையே அனாதை இல்லத்தில் நடக்கும் தவறை நேஹா கண்டுபிடித்து மேலாதிகாரிகளிடம் புகார் கொடுக்க, இந்த பிரச்னையால் வர்மன் நேஹாவை உடனடியாக திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. வீடும், வேலையும் கஷ்டப்பட்டு பல தடங்களுக்கு பிறகு கிடைக்க, நல்ல நிலைமைக்கு உயர்கிறார்கள். நேஹா கர்ப்பமடைய பிரான்மலையிலிருந்து வர்மனின் உறவினர்கள் வந்து பார்த்து விட்டு போகிறார்கள். அதன் பின் தந்தை வேலராமமூர்த்திக்கு உடல் நல குறைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வர, தம்பதியர் இருவரும் ஊருக்கு விரைகிறார்கள். அங்கே நடந்தது என்ன? வர்மனையும்-நேஹாவையும் அரவணைத்து ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? என்பதே அதிர வைக்கும் க்ளைமேக்ஸ்.
ஐடி கம்பெனியில் பிராஜக்ட் மேனேஜராக வேலை செய்யும் வர்மன் புதுமுகமாக இந்த படத்தில் அறிமுகம் என்று சொல்வதை விட நடிப்பில் தேர்ந்த முகமாக தெரிகிறார். பாடல்கள், சண்டை, சென்டிமெண்ட் காட்சிகள் என்ற அனைத்திலும் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் கைதட்டல் பெறுகிறார். எந்த ஒரு காட்சியிலும் ஆபாசமில்லாத வகையில் எடுத்து நடித்திருப்பது அற்புதம்.
நேஹா குடும்பபாங்கான முகத்தோடு அமைதியான புன்னகை மாறாமல் இயல்பான நடிப்பில் அசத்துகிறார்.
மற்றும் வேல ராமமூர்த்தி , கஞ்சா கருப்பு , பிளாக் பாண்டி , அருளாணாந்தம், முத்துக்காளை ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
அனைத்து பாடல்களும் குறிப்பாக ‘”என்ன பெத்த தாயே உன்னை என்ன சொல்லி பாராட்ட” என்று தாயின் பெருமையும், அன்பையும் பறை சாற்றும் பாடலாக நெகிழும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளில் தருண்குமார் இசையமைத்து உருக வைத்துவிடுகிறார்.
படையப்பா, அவ்வைசண்முகி,வரலாறு போன்ற வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.மூர்த்தியின் காட்சிக்கோணங்கள் படத்தின் முக்கிய காட்சிகளை தத்ரூபமாக கொடுத்து அசர வைத்துவிடுகிறார்.
இயக்கம்-அகரம்கமுரா. பல போராட்டங்களை கடந்து தடங்கலை தாண்டி உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆணவபடுகொலையை பற்றிச் சொல்லும் படம் பிரான்மலை. இன்றைய காலகட்;டத்தில் பரவலாக பல கிராமங்களில் நடந்து கொண்டிருக்கும் ஜாதி வெறி பிடித்த காதல் படுகொலைகளின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள் மனதை பதற வைக்கும். அப்படிப்பட்ட கதைக்களத்தை அமைத்து முதல் பாதியில் ஏற்படும் தோய்வை இரண்டாம் பாதியில் பரபரப்பாக இயக்கி க்ளைமேக்சில் சரி செய்து விடுகிறார் இயக்குனர் அகரம்கமுரா. சமூக அவலங்களை சுட்டிக்காட்டி, அதில் சேது படத்தின் சாயலோடு க்ளைமேக்ஸ் காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் விரசமில்லாமல் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இயக்கியிருக்கிறார் அகரம்கமுரா. பாராட்டுக்கள்.
மொத்தத்தில் காதலர்களின் அவல நிலையை சொல்லும் பிரான்மலை அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

நம்ம பார்வையில் ‘பிரான்மலை’க்கு 3 ஸ்டார் தரலாம்.