பிரபல நடிகர் அனில் முரளி காலமானார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. சின்னத்திரையில் பணியாற்றிய அவர், பின்னர் 1993-ம் ஆண்டு வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ஏராளமான மலையாள படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அனில் முரளி, மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 6 கேண்டில்ஸ், நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, கணிதன், தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் வால்டர்.
இதனிடையே கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.