பின்னணிப்பாடகியும் – பழம்பெரும் திரைப்பட நடிகையுமான R.பாலசரஸ்வதி பற்றி தெரிந்துக்கொள்வோம்..!
All India Radio ன் முதல் மெல்லிசைப்பாடகியும் தெலுங்கு திரையுலகின் முதல் பின்னணிப்பாடகியும், பழம்பெரும் திரைப்பட நடிகையுமான R.பாலசரஸ்வதி பிறந்த தினம் இன்று. (28 ஆகஸ்ட் 1928)
ஆர். பாலசரசுவதி (R. Balasaraswathi, Raavu Balasaraswathi அல்லது Rao Balasaraswathi Devi; தெலுங்கு: రావు బాలసరస్వతీ దేవి; பிறப்பு: 28 ஆகஸ்ட் 1928) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியும், நடிகையும் ஆவார்.
இவர் 1930கள் முதல் 1960கள் வரை தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர். ஆர். பாலசரசுவதி அனைத்திந்திய வானொலியில் முதன் முதலாக மெல்லிசைப் பாடல்களைப் பாடியவரும், தெலுங்குத் திரைப்படங்களில் முதன் முதலாக பின்னணி பாடியவரும் ஆவார்.
இவர் அல்லதுரு சுப்பையாவிடம் இசை பயின்று இவரது சுமார் ஆறுவயதில் HMV கிராமபோன் நிறுவனம் இவரது பாடல்களை பதிவு செய்துள்ளது.
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத்துவங்கிய இவர் தமிழில் 1936 ல் பக்த குசேலா திரைப்படத்தில் நடிக்கத்துவங்கி 1961 வரை நடித்துள்ளார்.
1936 இல் சி. புல்லையாவின் இயக்கத்தில் உருவான சதி அனுசூயா, பக்த துருவா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நடிகையாகப் பாடி நடித்தார். இவரது திறமையைக் கவனித்த இயக்குநர் கே. சுப்பிரமணியம் தமது தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அழைத்தார். பக்த குசேலா (1936), பாலயோகினி (1937), திருநீலகண்டர் (1939) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். துக்காராம் (1938) திரைப்படத்தில் முசிறி சுப்பிரமணிய ஐயர் துக்காராம் வேடத்தில் நடிக்க அவரது மகளாக பாலசரசுவதி நடித்தார்.
பாக்கிய லட்சுமி (1943) தெலுங்குத் திரைப்படத்தில் கமலா கோட்னிசு என்ற நடிகைக்கு பின்னணிப் பாடல் பாடினார்.
இவர் ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், சி. ஆர். சுப்பராமன், எஸ். வி. வெங்கட்ராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். அனுமந்தராவ், எஸ். ராஜேஸ்வர ராவ், சித்தூர் வி. நாகையா, கண்டசாலா, எஸ். தட்சிணாமூர்த்தி, வேதா, மாஸ்டர் வேணு, ஜி. கோவிந்தராயுலு, எம். பி. சீனிவாசன் ஆகியோரின் இசையமைப்பில் பாடல்களைப் பாடியுள்ளார்.
கண்டசாலா, ஏ. எம். ராஜா ஆகியோருடன் இணைந்து இவர் பல பாடல்கலைப் பாடியுள்ளார். அத்துடன் டி. எம். சௌந்தரராஜன், டி. ஏ. மோதி, சீர்காழி கோவிந்தராஜன், சு. ராஜம் ஆகியோருடனும் இணைந்து பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார்.