பச்சை விளக்கு திரை விமர்சனம்

0

பச்சை விளக்கு திரை விமர்சனம்

ரேட்டிங்

ஆதிக் மாறன், ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, ரூபிகா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் நடித்திருக்கும் பச்சை விளக்கு படத்தின் ஒளிப்பதிவு, பாலாஜி. இசை, வேதம் புதிது தேவேந்திரன்.

ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், அப்படி சாலை விதிகளை மீறுவதால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது என்பதை சமூக நோக்கத்துடன் கதை ஆரம்பமாகிறது. சாலை விதிகளை பற்றி பி.எச்.டி படித்திருக்கும் மாறன், சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவிற்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கிறார். இதிலிருந்து மாறன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் தீஷா. முதல் பார்வையில் நாயகி தீஷா மீது மாறனும் காதல் வசப்படுகிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில், தீஷாவின் சகோதரி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலிடம் சிக்குகிறார். இதையறிந்த மாறன், தீஷாவின் சகோதரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து தீஷாவின் சகோதரியை காப்பாற்றினாரா? இல்லையா? அந்த கும்பலை மாறன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊயர் போய் சேராது என்பதை விளக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி;, நாயகனாக நடித்திருக்கிறார் டாக்டர் மாறன். முதல் பாதியில், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை சொல்லியிருக்கிறார். இரண்டாம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமைகளையும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருக்கிறார். தவறாக செல்போனை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கத்தில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் நடிப்பிலும் செலுத்தியிருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் தீஷா, டிராபிக் போலீசாக வரும் இம்மான் அண்ணாச்சி, தாரா, மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் என அனைவருமே கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து திரைக்கதை ஓட்டத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கிறார்கள்.

வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் கிருதயா, டாக்டர் மாறன் ஆகியோரின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

கலை – நடராஜ், படத்தொகுப்பு – அர்ஸ்; சுரேஷ், நடனம் – சிவசங்கர், சந்திரிகா ஒளிப்பதிவு- பாலாஜி.படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் நிதானம் இங்கு மிக முக்கியம். நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும் என்பதை உணர்த்தும் படம் ‘பச்சை விளக்கு’.

நம்ம பார்வையில் ‘பச்சை விளக்கு’ படத்துக்கு 2 ஸ்டார் தரலாம்.