“நீங்கள் எடுத்ததிலேயே சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான் ” இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டிய பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்!!
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், காளிதாஸ் ஜயராம், துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 31 முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
இதனையொட்டி படக்குழுவினர் கேரளா, மும்பை போன்ற முக்கியமான இடங்களில் படத்திற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்கு இப்படத்தின் பிரத்யேகக் காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
இந்த சிறப்புக் காட்சியை பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், நீரஜ் கெய்வான், நடிகை நந்திதா தாஸ், தயாரிப்பாளர் தூபாஸ்வினி உள்ளிட்ட பலரும் பார்த்திருக்கிறார்கள்.
இயக்குநர் அனுராக் காஷ்யப், “நீங்கள் எடுத்ததிலேயே இதுதான் சிறந்த படம்” என்று இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டியுள்ளார். இயக்குநர் நீரஜ் கெய்வான், “சினிமாவின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி எடுத்திருக்கும் வகையில், பா.இரஞ்சித்தின் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும்” என்று கூறியதோடு படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களையும் பாராட்டி இருக்கிறார்.
பா.இரஞ்சித்தின் முந்தைய படங்களில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, காதலின் பல பரிமாணங்கள் குறித்த உரையாடலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்திற்கு, பிரபலங்களிடம் இருந்து கிடைத்து வரும் பாராட்டு படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னதாக இப்படத்தின், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.