நானும் சிங்கள் தான் விமர்சனம்

0
7

நானும் சிங்கள் தான் விமர்சனம்

த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்ஸ் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் நானும் சிங்கிள் தான். தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத், ரமா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கே.ஆனந்தராஜ். இசை ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் கபிலன் வைரமுத்து. இயக்கம் கோபி.

தினேஷ், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத் மற்றும் செல்வேந்திரன் ஆகிய நால்வரும் நெருங்கிய 90″ஸ் கிட்ஸ் நண்பர்கள். டாட்டூ கடை நடத்தி வரும் தினேஷ், திருமண ஆசையில் உள்ளார். தினேஷின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். வெளிநாடு சென்று வேலை பார்ப்பதை குறிக்கோளாக வைத்திருக்கும் நாயகி தீப்தி சதியை பார்த்ததும் காதல் வருகிறது. அவருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் தினேஷின் செயல் இருவரையும் பிரிக்கிறது. தீப்தி லண்டன் சென்று விடுகிறார். அவரைத் தேடி தனது நண்பர்களுடன் லண்டன் செல்கிறார் தினேஷ். அங்கு லவ் குருவாக இருக்கும் மொட்ட ராஜேந்திரன் காதலுக்கு ஐடியா கொடுக்கிறார். அங்கும் தீப்திக்கு காதல் தொந்தரவு கொடுக்கிறார். இந்நிலையில், தீப்தியின் வேலை தினேஷால் பறிபோய்விடுகிறது. ஒட்டுமொத்தமாக தினேஷை வெறுத்து தாயகம் திரும்புகிறார் தீப்தி. அதன் பின் இருவரும் இணைந்தார்களா இல்லையா? பிடிவாதமாக இருக்கும் ஹீரோயின் மனதை மாற்றுகிறாரா? இல்லை இவர் மனம் மாறுகிறாரா?  நயன்தாரா மாதிரி ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படும் ஹீரோவின் எண்ணம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நாயகன் தினேஷ் வழக்கமான அவரது அதே ஸ்டைலில் நடித்திருக்கிறார். வசனங்கள் உச்சரிப்பில் இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும்.

நாயகி தீப்தி சதி  வலிமையான ஹீரோயின் கதாபாத்திரம். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செய்துள்ளார். நடனம் அருமை.

நாயகனின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத் மற்றும் செல்வேந்திரன் தனக்கான பணியை நன்றாக செய்து முடித்திருக்கிறார்கள். இவர்களில் ஆதித்யா கதிரின் காமெடி கவுண்டர் 90 சதவீதம் கொஞ்சம் ஓவர் தான்.

ஒளிப்பதிவாளர் ஆனந்தராஜ்  கதைக்கான காட்சிகள் வித்தியாசமாகவும், இளமையாகவும் படமாக்கியுள்ளார்.

ஆண்டனியின் படத்தொகுப்பும், ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையும், பின்னனி இசையும் ஓகே ரகம் தான்.

ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் நானும் சிங்கிள்தான். வலிமையான ஹீரோயின் கதாப்பாத்திரம் அமைத்த இயக்குனர் கோபி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.

மொத்தத்தில் நானும் சிங்கிள் தான் – ரோமான்டிக் காதல் கிங்கு தான்.