நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகண்டா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாலகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆறு மாதகாலமாக பாலகிருஷ்ணாவுக்குத் தோள்பட்டையில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வலி கடுமையானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணாவுக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.