“நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சால்வை அணிவித்து வாழ்த்து!!”

0
79

“நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சால்வை அணிவித்து வாழ்த்து!!”

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ’நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது’ என்று விஷால் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர்,பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் , அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி
பெற்றனர்.

பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணி சார்ந்த தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் பூச்சி முருகன், வெற்றிபெற்ற நிர்வாகிகள் பலர் , சென்னை தலைமை செயலகத்தில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறியதாவது, ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம், நேர்மை உள்ளது.

பொறுமையாக காத்திருந்து வெற்றியை பெற்றதில் பெருமையடைகிறோம். நடிகர் சங்க புதிய கட்டிடம் உட்பட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மனதை திடப்படுத்திக் கொண்டு பணியாற்றுவதே எங்கள் நோக்கம்.

வாக்கு எண்ணிக்கையை நடத்த டென்னிஸ் கோர்டைத் தவிற மற்ற அனைத்து கோர்டுக்கும் சென்றுள்ளோம். இதன் காரணமாகவே என் திருமணமும், நடிகர் சங்க புதிய கட்டிடப் பணியும் முடியாமலேயே உள்ளது என்றும் தெரிவித்தார்.

சென்னைக்கு வருபவர்கள் சுற்றுலாத் தளங்களை காண்பதுபோல் நடிகர் சங்க புதிய கட்டிடத்தை பார்க்கும் அளவுக்கு உருவாக்கவுள்ளோம். நாடக நடிகர்களின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் உழைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

சொன்னதை செய்வோம், செய்து காட்டுவோம் என உறுதி அளித்த நடிகர் விஷால்  இதுவரை 60% பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 மாதங்கள் நேரம் கிடைத்திருந்தால் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் தற்போது 3 ஆண்டுகள் பணிகள் இழுத்தடிக்கப்பட்டதால் செலவு 25% கூடியுள்ளது.

அதாவது இன்னும் 21 கோடி தேவைப்படுகிறது என்றும் தேவையான தொகையைத் திரட்ட அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது. கவுரவமாக பிச்சையெடுத்தாவது கட்டிடப் பணிகளை நிறைவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘முதலமைச்சரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். விரைவில் கடிதமாகவும் தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொடுக்கவுள்ளோம்.  எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் காழ்புணர்ச்சி இல்லை. ஐசரி கணேஷ், சரத் குமார் ஆகியோரிடமும் நிதி உதவி கிடைக்குமாயின் பெற்றுக்கொள்வோம். எல்லாவற்றிலும் இணைந்தே செயல்பட எண்ணுகிறோம்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கார்த்திக், ‘அனைவரும் சேர்ந்து தான் கோயில் கட்ட முடியும் என்பதுபோல் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரிடமும் நேரடியாக சந்தித்து பேசிதான் நிதியை திரட்டவுள்ளோம். கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட அனைத்தையும் கலந்தாலோசித்து பணிகளை தொடங்க இன்னும் 3 மாதங்கள் தேவைப்படும் எனவும் தணிக்கை குழு சான்று பெற்ற திரைப்படங்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் வரும் தொடர் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உதவுவோம் என்றும் தெரிவித்தார்.

அவர் கொரோனா காலத்தில் உயிரிழந்த நாடக நடிகர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான உதவிகள் செய்ய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அழைத்தார்.

தொடர்ந்து பேசிய பூச்சி முருகன், ‘சங்க விதிப்படி பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி காலம் உள்ளது. எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாங்கள் கட்டாயம் பதவியில் இருப்போம். நலிந்த நடிகர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டி தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

“நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சால்வை அணிவித்து வாழ்த்து!!”

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன் மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை 65 -ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட நமது “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் அதன் தலைவர் D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S.கார்த்திகேயன் , பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத்தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.