தேள் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்

0
154

தேள் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்

பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள தேள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூழலில், தற்போது திடீரென ரிலீஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அனைவராலும் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நடன இயக்குனராக உள்ள பிரபுதேவா பல படங்களை இயக்கி இயக்குனராகவும், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் ஆணித்தரமாக காலை ஊன்றி இருக்கும் பிரபுதேவாவின் இயக்கத்தில் சல்மான் கான் கூட்டணியில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடைசியாக வெளியான ராதே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பிரபுதேவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவருக்கு கடைசியாக வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

பிரபல இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படத்திற்கு தேள் என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் பிரபுதேவா ரவுடியாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் . ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிய தேள் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர்.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எதிர்பாராத காரணத்தினால் ‘தேள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்புக்கு நன்றி. விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிரபுதேவா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.