தேன் சினிமா விமர்சனம்

0
61

தேன் சினிமா விமர்சனம்

குறிஞ்சுக்குடி மலைகிராமத்து இளைஞரான வேலு, கொழுக்கு மலைக்கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடியை ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார். பெண் குழந்தை பிறந்து இன்பமான வாழ்க்கைச் செல்ல, பூங்கொடிக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. வேலு தன் மனைவியை அழைத்துக்குக் கொண்டு மலைக்கு கீழே இருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அங்கே ஆஸ்பத்திரியில் அலைக்கழிக்கப்பட்டு மனைவியை கஷ்டப்பட்டு சேர்க்கிறார். வைத்தியம் செய்ய அரசாங்க காப்பீட்டு அட்டை தேவை என்று சொல்ல, அதற்காக பாவா லட்சுமணன் உதவியோடு பல சிரமங்களுக்கிடையே பெறுகிறார். அதற்குள் மனைவியின் உடல்நிலை மோசமாகி விடுகிறது. காப்பாற்ற முடியாத அளவிற்கு மனைவி பூங்கொடிக்கு என்ன நேர்ந்தது? வேலுவிற்கு நேர்ந்த சோகம் என்ன? என்பதே மீதிக்கதை.
வேலுவாக தருண்குமார், பூங்கொடியாக அபர்ணதி, அப்பாவாக கயல் தேவராஜ், வாய் பேசமுடியாத குழந்தையாக அனுஸ்ரீ, பிச்சைக்காரராக பாவா லட்சுமணன், சுயநலவாதியாக அருள்தாஸ் மற்றும் பலர் கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக கிராமத்து மக்களாக யதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
கச்சிதமான ஒளிப்பதிவு சுகுமாருக்கு பேர் சொல்லும், சனத் பரத்பாஜின் இசை படத்தின் வெற்றிக்கு துணை போகும்.

எடிட்டிங்-லாரன்ஸ் கிஷோர், சண்டை-ஆக்ஷன் நூர், வசனம்-ராசி தங்கதுரை, பாடல்கள்- ஞானவேல், ஸ்டாலின், கலை-மாயபாண்டி என்று ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்பால் படத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்.
பல போராட்டங்களை கடந்து தடங்கலை தாண்டி மனைவியின் உயிரை காப்பாற்ற போராடும் மலைக்கிராமத்து இளைஞனின் வலியை சொல்லும் படம் தேன். மலைக்கிராமத்து இளைஞனின் காதல், வாழ்க்கை, பாசம்,போராட்டம், நட்பு, செண்டிமென்ட் கலந்து தெளிந்த நீரோடைப்போல் திரைக்கதையமைத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ்; விநாயகன்.  படம் முழுவதும் திரைக்கதையால் ஈர்த்து, ஒரு சிலரைத் தவிர புதுமுகங்களோடு களமிறங்கி, கிராமத்து இயற்கையை அள்ளித் தந்து, அவர்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து, அதில் அரசாங்க அதிகாரிகள் நடத்தும் குள்ளநரித்தனங்களை தோலுரித்து அப்பட்டமாக, ஒவ்வொரு சம்பவத்தையும் காட்சிப்படுத்தி, முறைகேடுகளையும், அதிகார ஆணவத்தையும் சுட்டிக்காட்டி அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் வலிகளை வலுவாக ஆணித்தரமாக கொடுத்து பார்ப்பவர் மனங்களை இறுதிக் காட்சியில் அதிர வைத்து விட்டார் இயக்குனர் கணேஷ் விநாயகன். இவரின் அயராத உழைப்பிற்கும்,முயற்சிக்கும் பல விருதுகள் காத்திருக்கின்றன.
அனைவரையும் கவர்ந்து சோகத்தால் கட்டிப்போடும் தேன்.