திரௌபதி திரை விமர்சனம்

0

திரௌபதி திரை விமர்சனம்

ரேட்டிங்

நடிப்பு – ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ, நிஷாந்த், சௌந்தர்யா, சேசு, லெனாகுமார், ஆறுபாரா, அம்பானி சங்கர், ஜே.எஸ்.கே.கோபி, இளங்கோ, கோபி
தயாரிப்பு – ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன் ஜி
இசை – ஜுபின், பாடல்கள்- பட்டினத்தார், மோகன்.ஜி, மணிகண்டன்ப்ரியா
கலை- பிரியா
எடிட்டிங்-தேவராஜ்
நடனம் -ஜானி
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, புவன்.
நேரம் – 2 மணி நேரம் 28 நிமிடம்

கதை: ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) மனைவி திரௌபதி (ஷீலா ராஜ்குமார்), மைத்துனி ஆகியோரைக் கொன்ற குற்றத்திற்காக சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் 6 மாதங்கள் கழித்து வருகிறார். நண்பர்களின் உதவியால் சென்னை வந்து சைக்கிளில் டீ விற்பவர் போன்று நடித்து பதிவாளர் அலுவலகத்தை நோட்டமிட்டுகிறார். அதே நேரத்தில் ஒரு வழக்கறிஞர், ஒரு சாதிக் கட்சி பிரதிநிதி என இருவரையும் பின் தொடர்கிறார். மனைவி திரௌபதியின் சபதத்தை முடிக்க வேண்டும் என்று நண்பரிடம் கூறி விட்டு அந்த வக்கீல் மற்றும் அரசியல்வாதி ஆகிய இருவரையும் முகத்தை மறைத்துக் கொண்டு கொடூரமாகக் கொலை செய்கிறார். அவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரிக்கு அனுப்புகிறார். அந்தக் கொலையை யார் செய்தது என்பது பற்றி போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் திருமண பதிவாளரையும் கொல்ல முயற்சிக்கிறார். போலீஸ் ருத்ர பிரபாகரன் தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். ஆனால், அவர் தான் எந்த கொலைகளையும் செய்யவில்லை, தான் ஒரு நிரபராதி என்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் நிரபராதி என்று நிரூபித்தாரா? அவர் மனைவி திரௌபதிக்கு என்ன ஆனது? அவர் கொலையாளியா? இருவரை ஏன் கொலை செய்தார்? திரௌபதியின் சபதம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிலம்பம் ஆசிரியராக முறுக்கு மீசையில் கம்பீரமாக தோன்றும் ரிச்சர்ட் பொறுமை, ஆக்ரோஷம் இரண்டையும் காட்டி பிளாஷ்பேக்கில் திரௌபதியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஷீலா ராஜ்குமார் திரௌபதியின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். தமிழ்ப் பெண்களுக்கே உரிய அத்தனை அம்சங்களுடன் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் வசனங்களில் கேரக்டருக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

வழக்கறிஞராக முக்கிய கட்டத்தில் தோன்றும் கருணாஸ் மனதில் நிற்கிறார். மற்ற நடிகர்கள் அவரவர் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிஷாந்த் நடிப்பில் கம்பீரம் இல்லை மாறாக அவர் முகத்தில் பதட்டம் தான் தெரிகிறது.

ஆங்காங்கே தொய்வை ஏற்படுத்தும் திரைக்கதைக்கு பின்னணி இசை மூலம் தூக்கி நிறுத்துகிறார் ஜுபின். கிராமத்தின் அழகை நேர்த்தியான ஒளிப்பதிவை பதிவிட்டுள்ளளர் மனோஜ் நாராயண்.

படத்தொகுப்பாளர் தேவராஜ் கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மோகன் ஜி.யின் இரண்டாவது படம் திரௌபதி. பெண்கள் மீதான வன்கொடுமைகளையும், காதல் என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் கும்பலின் அடாவடித்தனத்தை மைய கருவாக தேர்ந்தெடுத்த இயக்குனர் மோகன் ஜி, திகைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். திருமண மோசடிகளை சாதி பின்னணியை வைத்து கையாண்ட விதம் ஏமாற்றமே தருகிறது.

இன்று காதலித்து ஏமாற்றுவோரில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உண்டு. குறிப்பாக ஆன்லைன் மூலம் ஏமாற்றும் கலாச்சாரம் இன்று அதிகமாக அரங்கேறுகிறது. இதில் சாதி, மத பேதமில்லை.
இன்று இளைஞர்களை (சாதிக்கு அப்பார்பட்டு) காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்கள் பலர் மகிழ்ச்சியுடன் சமுதாயத்தில் கௌரமாகவே குடும்பம் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

மொத்தத்தில் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள திரௌபதி சாதி படமல்ல மாறாக அனைத்து தரப்பு மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிற சமுதாய அக்கறை உள்ள படம்.

நம்ம பார்வையில் ‘திரௌபதி” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.