தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இடையேயான மோதலுக்கு சிம்புதான் காரணம்… ஆர்.கே.செல்வமணி

0
79

தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இடையேயான மோதலுக்கு சிம்புதான் காரணம்… ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஒரு சிலர் நலனுக்காக தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியதோடு, பெப்சி உடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு குறித்த எந்த தகவலும் எங்களுக்கு முறைப்படி வரவில்லை. பெப்சி தலைவராகிய நான் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்களை விடவும், தயாரிப்பாளர் நலனுக்காக நாங்கள் பல விஷயங்களை செய்துள்ளோம்.

சிம்பு நடிக்கும் நான்கு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இருப்பதால் அவர் படங்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டது. அதன்படியே நாங்களும் நடந்து வந்தோம். தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தனது படத்தின் வெளியூர் படப்பிடிப்புக்கு 4 நாள் மட்டும் அனுமதி கேட்டார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனுமதி தந்த பின்னரே அந்த படத்தில் பெப்சி தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.

இதில் இரண்டு சங்கங்களுக்கு இடையிலான எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் மீறவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ இதனை செய்கிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழக முதல்வரை சந்தித்து சுமூகமான தீர்வை பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.