தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி

0
44

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார். இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று காலையில் தொடங்கியது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார்.

துணைத்தலைவர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது துணைத்தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் வெற்றி பெற்றார். கௌரவ செயலாளர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணியைச் சேர்ந்த மன்னனும் முரளி அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.

கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன்

பொருளாளர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே ஊடகங்களுக்கு பேட்டியளித்த முரளி விரைவில் முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக கூறினார்.