தமிழ் சினிமாவின் இயக்கத்திற்கு முக்கியமான தூண் ரஜினி – பட்டுக்கோட்டை பிரபாகர்
சிவாஜி ரசிகர்களாலும் எம்.ஜி.ஆரை ரசிக்க முடியும்.
அப்படி கமல் ரசிகனான என்னால் ரஜினியைத் தவிர்க்க முடியாது.
யோசித்துப் பார்த்தால்.. ரஜினியின் படங்களை இரண்டாம் முறை பார்த்ததில்லை. (இயக்குனருக்காக பார்ப்பது நீங்கலாக.) ஆனால் எந்தப் படத்தையும் பார்க்காமல் விட்டதுமில்லை.
ரஜினியின் எந்தப் பின்னணியும் இல்லாத அறிமுகத்திலிருந்து சரசரவென்ற வளர்ச்சிக்கும் இன்றைய உச்ச நிலைக்கும் நிச்சயமாக அதிர்ஷ்டம் காரணமில்லை. அவரின் தனி ஸ்டைல், தன்னைத் தானே பட்டைத் தீட்டிக்கொண்டது, அபார உழைப்பு, அடிப்படையான நல்ல பண்புகள் எல்லாம்தான் காரணம்.
தன்னை வளர்த்துவிட்ட நலிவடைந்த பல தயாரிப்பாளர்களை இணைத்து படம் செய்து லாபம் பிரித்துக் கொடுத்திருக்கிறார். தன் படத்தால் மோசமான நஷ்டத்தைச் சந்தித்த வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பிக்கொடுத்திருக்கிறார்.
எல்லா பேட்டிகளிலும் எதார்த்தம் இருக்கும். தேவையற்ற பில்டப் இருக்காது. தெரியாததைத் தெரியாதென்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.
அரசியல் விஷயத்தில் மட்டும்தான் சறுக்கினார்.
தெளிவான முடிவெடுக்காமல் பல வருடங்கள் பலருக்கும் நம்பிக்கை வளர்த்ததும், தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றத்தினரை எதிர்கால அரசியல் எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கில் செலவு செய்ய வைத்ததும் அறமற்ற செயல்.
உடல்நல பிரச்சினைகள், குடும்பத்தினர் தரும் குடைச்சல்கள் தாண்டி இன்றும் படங்கள் நடிக்கிற அந்த ஆர்வத் தீயை மட்டும் அணையாமல் பார்த்துக்கொள்வது பெரிய விஷயம்.
தமிழ் சினிமாவுக்கு வெளிநாடுகளில் முதலில் கதவைத் திறந்தது இவர்தான். இவரின் ஒவ்வொரு பிளாக்பஸ்டர் படங்களின் வெற்றிகளுக்குப் பின்னாலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.
சினிமா உலகம் நிலைத்து இயங்க பொழுதுபோக்கு படங்கள் அவசியத் தேவை. அந்த வகையில் தமிழ் சினிமாவின் இயக்கத்திற்கு முக்கியமான தூண் ரஜினி.
அவரின் 73 ஆவது பிறந்த நாளில் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
கூடவே ஒரு கோரிக்கை. கபாலி, காலா போன்ற
கேங்ஸ்டர் படங்கள் போதும் சார். அமிதாப் பச்சன் போல பாத்திரங்கள் தேர்வு செய்து நடியுங்கள். நீங்களே அடிக்கடி உங்களுக்குப் பிடித்த படமென்று சொல்லும் முள்ளும் மலரும் போன்ற படங்கள் தாருங்கள்.
நன்றி
பட்டுக்கோட்டை பிரபாகர் – முகநூல் பதிவு