தமிழில் திரைப்படப்பெயர் வைத்தால் சலுகைகள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்: தயாரிப்பாளர் கே ராஜன் கோரிக்கை

0
90

தமிழில் திரைப்படப்பெயர் வைத்தால் சலுகைகள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்: தயாரிப்பாளர் கே ராஜன் கோரிக்கை

“தமிழகத்தில் தயாராகும் திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் வைத்தால் சலுகைகள் வழங்கப்படும் என்ற திட்டம் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் மீண்டும் தற்போது நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வோர்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பொன். புலேந்திரன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’

இதில் புதுமுக நடிகர் சரோன், அறிமுக நடிகை பிரியா, நடிகர்கள் கார்த்திகேயன், யாகவன், முகிலன், கணேஷ், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். கோபால். பி. ஜி. வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப படத்திற்கு கீயூரன் மென்டிசன், எம். எஸ். ஸ்ரீகாந்த் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஏ. ரமணிகாந்த், ஹெரால்ட் மென்டிஸன் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன், பாடலாசிரியரும், நடிகருமான சினேகன், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குநரும், நடிகரும், தமிழ் இன உணர்வாளருமான வ. கௌதமன், நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில்- ராஜலட்சுமி தம்பதியினர், வசனகர்த்தா ஏ. பி. சிவா, இசையமைப்பாளர் எம். எஸ். ஸ்ரீகாந்த், படத்தின் நாயகி பிரியா, நடிகர் முகிலன், நடிகர் பப்பு , தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தலைவர் டைமண்ட் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆர். கோபால் பேசுகையில்,
” தயாரிப்பாளர்களிடம் படத்தின் கதையை விவரிக்கும்போது, படத்திற்கு ஏன் ‘அடங்காமை’ என பெயர் வைத்திருக்கிறீர்கள்? எனக் கேட்டனர்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது அதிகளவு பேருந்துகளில் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற இந்த திருக்குறள் தான் இடம் பெற்றிருக்கும். எத்தனையோ திருக்குறள் இருக்க, இந்தத் திருக்குறளை மட்டும் அதிகளவிலான பேருந்துகளில் இடம்பெற்றிருப்பதன் பின்னணி குறித்துச் சிந்தித்தேன். பிறகு இந்தக்குறளுக்கான பதவுரை, பொழிப்புரை ஆகியவற்றையும் வாசித்தேன். மேலும் இந்தத் திருக்குறளை மேற்கோளிட்டு ஏராளமான தலைவர்கள் உரையாற்றியதையும் அறிந்தேன். அதனைத்தொடர்ந்து இதனை மையமாக வைத்து கதை ஒன்றை உருவாக்கினேன். திருக்குறள் அனைவரது வாழ்வியலோடு இரண்டறக் கலந்து இருப்பதையும் உணர்ந்தேன். பிறகு இதை மையப்படுத்தி, அடக்கமான ஒரு நாயகன், அடங்காத இரண்டு நண்பர்கள் என மூவரை மையப்படுத்திக் கதையை எழுதினேன். இதில் மூவருக்கிடையேயான காதல், துரோகம் எல்லாம் கலந்த கலவையாகத் திரைக்கதையை உருவாக்கினேன்.

படத்தின் நாயகன் சரோன், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். படப்பிடிப்பின் போது இங்கு வருகை தருவதில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பல சிக்கல் இருந்தது. பல தடைகளையும் கடந்து, இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை டென்மார்க்கில் வசிக்கும் ஈழத் தமிழரான கீயூரன் மென்டிசன் இசையமைத்திருக்கிறார். மற்றொரு இசையமைப்பாளரான எம் .எஸ் .ஸ்ரீகாந்த் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மற்றும் பின்னணி இசையை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கே ராஜன் நான் வசிக்கும் வட சென்னை பகுதியைச் சேர்ந்தவர். அவர் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பேசும் மேடை பேச்சுக்களை இணையதளத்தில் கண்டு, அவரின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்டேன். ஒரு படத்தின் வெற்றிக்கு ஆதாரம் கதை என்பதையும், அந்தக் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்? அப்படத்திற்குரிய பட்ஜெட் என்ன?, அதற்கான வியாபாரம் என்ன? என பல விஷயங்களை அவர் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் 1993 ஆம் ஆண்டில் கலை இயக்குநர் தோட்டா தரணி அவர்களது மேற்பார்வையில் பிரசாத் படப்பிடிப்பு வளாகத்தில் உருவான அரங்கம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றியவர்கள். அதன் பிறகு வாழ்க்கையில் முன்னேறி சினிமா மீதான பேரார்வத்தின் காரணமாக இப்படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள்.

திருக்குறளை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திரைப்படம் உருவாக்குவது நல்லதொரு தொழில். சில திட்டமிட தெரியாத படைப்பாளிகளால் தான் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை எம்முடைய அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் உதவி எழுத்தாளராக அறிமுகமாகி, அதன் பிறகு திரைக்கதை ஆசிரியர் அன்னக்கிளி செல்வராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி, திரைக்கதை மற்றும் திரைப்படத்தின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தின் மூலம் இந்தப் படத்தைச் சிறிய பட்ஜெட்டில் அற்புதமாகச் செதுக்கி இருக்கிறேன். இதுபோன்ற சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களை ரசிகர்கள் திரை அரங்கிற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்,
” படத்தில் பணியாற்றும் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எந்த முதலீடும் இல்லாமல் தனித்திறமையுடன் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்குப் படப்பிடிப்பு தொடங்கி, இசை வெளியீடு வரை அனைத்து செலவுகளையும் செய்வது தயாரிப்பாளர்கள். படம் முடிவடைந்த பிறகு படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் ஏதேனும் சிறிய அளவிலாவது வருவாயைக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை..?!

சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்திற்கு வியாபாரம் நடைபெற்று, படத்தின் முதலீட்டில் 50 சதவீதமாவது திரும்பி வந்தால் மீண்டும் அவர் மற்றொரு திரைப்படம் தயாரிக்க முன்வருவார்.

கடந்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஆயிரம் தயாரிப்பாளர்களாவது திரைப்படத்தைத் தயாரித்திருப்பார்கள். இந்த ஆயிரம் தயாரிப்பாளர்களில் தற்போது திரைப்படத்தை தயாரிப்பது யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இன்றைய சூழலில் திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு முழுமையான காரணம் இயக்குநர்தான். அத்துடன் அவர் கேட்கும்போதெல்லாம் பணத்தை வாரியிறைத்த தயாரிப்பாளரும் மற்றொரு காரணம்.

தமிழ் திரை உலகத்தில் முதலில் தமிழர்களுக்குத் தான் வேலை. அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும். அதில் பற்றாக்குறை ஏற்படும் பொழுது நமது சகோதரர்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வேற்றுமொழி பேசுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.

இந்தத் தருணத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘தர்பார்’ படத்தின் மீது எமக்குக் கோபம் உண்டு. மும்பையில் படப்பிடிப்பு நடத்தியதால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. இந்த விஷயத்தை தமிழ் பையனான ஏ ஆர் முருகதாஸ் செய்திருக்கக்கூடாது என்ற வருத்தம் எனக்கு உண்டு. ‘தர்பார்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் எடுத்திருந்தால்.., என்னுடைய பெப்சி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் பலனடைந்திருப்பார்கள்.

‘தெய்வப்புலவர்’ திருவள்ளுவர் எழுதிய திருக்குறளிலிருந்து ஒரு குறளை எடுத்து அதனை தலைப்பாக்கி இருப்பதற்காக இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். தமிழில் ஏராளமான தலைப்புகள் உள்ளன. பிற மொழிகளுக்கும் தமிழிலிருந்து தலைப்புகளைத் தாராளமாக அள்ளித் தரலாம். திருக்குறள், கம்பராமாயணத்திலிருந்து ஏராளமான தலைப்புகளை எடுத்து கையாளலாம். கண்ணதாசனின் பாடல்களிலும் தலைப்புகள் கிடைக்கும். இதையெல்லாம் தவிர்த்து, ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது ஏன்? ஆங்கிலத்தில் தலைப்பை தேடுவது ஏன்? ஆங்கிலத்தில் ஒரு படத்தின் தலைப்பை வைத்தால் அந்தப் படம் ஐநூறு நாள் ஓடுமா?

டாக்டர் கலைஞர் அவர்கள் இதற்கு ஒரு அற்புதமான திட்டத்தை முன்மொழிந்தார். தமிழில் பெயர் வைத்தால் மானியம் தருவேன் என அறிவித்தார். பல தயாரிப்பாளர்கள் இந்த சலுகையைப் பெறுவதற்காக தமிழில் பெயர் சூட்டினார்கள். ஆட்சி மாறியதும் இது பெரிதாக வலியுறுத்தப்படவில்லை.

திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்கத் தெரியாதவன் மடையன். கல்வியறிவு இல்லாதவன். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் அதை எதிர்த்து நான் போராடுவேன். ஆங்கிலத்தில் படத்தின் தலைப்பை வைப்பவர்களை நான் வருத்தத்துடன் கண்டிக்கிறேன்.

திருக்குறளை மையப்படுத்தி சிறிய முதலீட்டில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுங்கள். ஏனெனில் தற்போது படத்தை வியாபாரம் செய்வதற்கான விநியோகஸ்தர்கள் இல்லை. கொரோனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தொழிலை சீரழித்து விட்டது.

கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழில் பெயர் வைத்தால் சலுகை வழங்கப்படும் என்ற திட்டத்தை மு. க .ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை ஒரு வேண்டுகோளாகச் சமர்ப்பிக்கிறேன். திரைப்பட விருதுகள் வழங்குவது, திரைப்படங்களுக்கான மானியங்கள் வழங்குவது போன்றவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் தமிழக முதல்வரின் செயல்பாடு வரலாற்று சிறப்புமிக்கது. அவரது வேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது. அதே தருணத்தில் சினிமா கலைஞர்களின் வழிவந்த வாரிசான அவர், திரைத்துறை வளமுடன் செயல்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.. குறிப்பாக சிறு முதலீட்டு படங்கள் வெளியாவதில் உள்ள சிக்கல்களைக் குழு அமைத்து களைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில்,

“இந்த திரைப்படத்தை எம்முடைய ஈழ தமிழர்கள் இருவர் தயாரித்திருக்கிறார்கள். மேலும் ஒரு சகோதரர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டத்தில்,’ எங்கட பிள்ளைகளாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும்.’ என்று ஒரு பெரியவர் தன் தோளில் சாய்ந்திருக்கும் பிள்ளையை தட்டிக் கொடுத்துக் கொண்டே பேசும் வசனம் வலி மிகுந்தது. எதிர்காலக் கனவு குறித்துப் பேசும் அந்த வசனம் மிக முக்கியமானது. இதற்கு என்ன தீர்வு? என யோசிக்கும்போது, அதற்கான பாதை சூனியமாக இருக்கிறது.

அவர்களுக்கான பாதை குறித்து ஐநா அவையில் உரையாற்றி இருக்கிறேன். ஆனால் இவர்களுக்கான வழி குறித்து இதுவரை தீர்க்கமான ஒளித்தடம் தெரியவில்லை. ஆனால் தீர்வு இல்லாமல் இல்லை. இதற்கான இறுதியான தீர்வு கிடைக்கும் வரை இளைய தலைமுறை போராடிக் கொண்டே இருக்கும். அனைவரும் கைவிடப்பட்ட நிலையில் தான் ஜல்லிக்கட்டை இளைய தலைமுறை கையிலெடுத்து வெற்றி கண்டது. அதனால் இவ்விடயத்திலும் இளைய தலைமுறை தீர்வு காணாமல் இருக்காது.

இந்நிலையில் இந்த மண்ணிலும் சத்தமில்லாமல் யுத்தமொன்று நடக்கிறது. ஆதி குடியான தமிழ் மக்களை அழிப்பதற்கான சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு அனைவரும் விழிப்புணர்வுடன், எத்தகைய அத்துமீறல் நடைபெற்றாலும் அங்கு ஜனநாயக ரீதியான யுத்தம் ஒன்றை நடத்தி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். “என்றார்.

பாடலாசிரியர், நடிகர் சினேகன் பேசுகையில்,

“இப்படத்தின் இயக்குநர் கோபால் அவருடைய திரையுலக தொடர்புகளின் மூலம் பெரிய பட்ஜெட்டில், முன்னணி திரைப்பட நிறுவனங்களின் படங்களை இயக்கி இருக்கலாம். ஆனால் தான் நம்பும் கதைக்களத்தில், திரைக்கதையை உருவாக்கி தயாரிப்பாளரைத் திருப்தி செய்து, படத்தை இயக்கி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. அதுவும் தற்போது திரைப்படத்துறையில் ஆக்கிரமித்திருக்கும் ஓ டி டி என்னும் டிஜிட்டல் தளங்கள், வெற்றி பெற்ற முன்னணி நட்சத்திரங்களை மட்டுமே நம்பி முதலீடு செய்கிறது. அவர்கள் புதிய திறமைசாலிகளுடன் நல்ல கதைகளைக் கொண்ட படைப்புகளை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்புவதே இல்லை. இதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும். திரையுலகில் வலிமையாக இருக்கும் தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து, இதற்கான மாற்றுத் தீர்வை முன்வைத்து, சிறிய முதலீட்டுப் படங்களும் டிஜிட்டல் தளத்தில் வெளியாவதற்கான வழிவகை காண வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் உதவியையும் கேட்டுப் பெற வேண்டும். அப்போதுதான் திரையுலகில் புதிய படைப்புகளும் புதிய தயாரிப்பாளர்களும் வருகை தந்து திரையுலகை வளமுடன் வழிநடத்திச் செல்வார்கள். திரையுலகமும் ஆரோக்கியமான முறையில் செயல்படும்”என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்,

“திரையுலகில் இன்று அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் மூலமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்வதும், விழாவில் கலந்து கொள்வதும் அரிதாக இருக்கிறது. இந்த வேளையில் இதுபோன்ற விழா நடைபெறுகிறது என்பதை கேள்விப்படுவதே மகிழ்ச்சியை அளித்தது. தற்போது அதுபோன்ற ஒரு விழாவில் கலந்து கொள்வது அளவற்ற சந்தோஷத்தை அளிக்கிறது. இதற்கென தனியாக துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சல் இந்த படக்குழுவினருக்கு இருக்கிறது. அதனால் அவர்களது நோக்கம் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.

நான் தயாரிப்பாளராக தான் மீண்டும் களமிறங்க வேண்டும் என நினைத்திருந்தேன். இன்றைய சூழலில் சிறிய முதலீட்டில் படங்கள் தயாரிப்பது சிரமமாக இருக்கிறது. அதே தருணத்தில் புதிய திறமைசாலிகள் இங்கு ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற படங்களின் மூலம் தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஊடகங்கள்தான் இவர்களை விளம்பரப்படுத்தி மக்களிடம் சென்றடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறும். தமிழ் திரை உலகில் தமிழ் பேசும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்படுகிறது”என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் படத்தின் இசைத் தகட்டை வெளியிட, படக்குழுவினர் மற்றும் வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர்களில் ஒருவரான மைக்கேல் ஜான்சன் வரவேற்றார்.