டைரி விமர்சனம்: பலரது வாழ்க்கைக்குறிப்பை ஒரே படத்தில் புரட்டி போடும் ஆக்ஷன் கலந்த மர்மங்கள் நிறைந்த த்ரில்லிங் பயண அனுபவத்தை கொடுக்கும் டைரி | ரேட்டிங்: 3.5/5

0
239

டைரி விமர்சனம்: பலரது வாழ்க்கைக்குறிப்பை ஒரே படத்தில் புரட்டி போடும் ஆக்ஷன் கலந்த மர்மங்கள் நிறைந்த த்ரில்லிங் பயண அனுபவத்தை கொடுக்கும் டைரி | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து
ஒளிப்பதிவாளர்: அரவிந்த் சிங்
இசை: ரான் ஈதன் யோஹன்
இயக்கம்: இன்னாசி பாண்டியன்.
மக்கள் தொடர்பு: D’One

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்க டைரி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இன்னாசி பாண்டியன்.

சப் இன்ஸ்பெக்ரடராக தேர்வாகும் அருள்நிதிக்கு உதகையில் 16 ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாத புதுமண தம்பதி கொலை வழக்கை முடிக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. உதகையில் தீவிர விசாரணையில் அருள்நிதி இறங்குகிறார். இதற்கு முன் இந்த வழக்கை விவாரித்த ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டரிடமும் விவரங்களை கேட்டறிகிறார். இதனிடையே அங்கே தங்கும் விடுதியில் மூன்று கொள்ளைக்காரர்கள் புதுமண தம்பதியை நகைக்காக கொன்று விட்டு தப்பிக்கின்றனர்.அந்த மூவரும் வழியில் கோயமுத்தூர் செல்லும் அரசு போக்குவரத்து பேருந்தில் ஏறுகின்றனர். அந்த பேருந்தில் ஒரு பாட்டி, காதலியின் திருமணத்தை நிறுத்த செல்லும் காதலன் ஷாரா , எம்எல்ஏவை ஏமாற்றிவிட்டு ஒடி வரும் காதல் ஜோடி, வக்கீல் குடும்பம், விடுதியில் தங்கி படிக்க செல்லும் மாணவி, வீட்டை விட்டு வெளியேறும் இளைஞன், விதவை தாய், படுகர் இன குடும்பத்தார் என்று பலர் பயணிக்கின்றனர். அந்த பேருந்தில் ஆமானுஷ்ய சக்தி இருப்பதாக பாட்டி ஷாராவிடம் சொல்ல, இருவரும் பேருந்தை விட்டு இறங்கி விடுகின்றனர். இவர்கள் இதனிடையே அருள்நிதியின் காரை திருடி விற்று விட்டுச் செல்லும் கார் திருடனை தேடி வரும் அருள்நிதியை வழியில் சந்தித்து நடந்தவற்றை கூறுகின்றனர். அருள்நிதி அந்த பேருந்தில் என்ன நடக்கிறது என்பதையறிய ஷாரவை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பஸ்ஸை விரட்டி பிடித்து ஏறுகிறார். அந்த பஸ்ஸில் பயணிக்கும் கொள்ளைக்காரர்களை கண்டு பிடித்தாரா? ஆமானுஷ்ய சக்தியை உணர்ந்தாரா? அந்த பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கும் அருள்நிதிக்கும் என்ன தொடர்பு? மர்மங்கள் நிறைந்த அந்த பேருந்தில் நடந்தது என்ன? இதற்கும் அருள்நிதி விசாரிக்கும் வழக்கிற்கும் எதாவது சம்பந்தம் உண்டா? அருள்நிதிக்கு  சிறு வயதில் நடந்த சோக சம்பவம் என்ன? என்பதே படத்தின் முடிவு.

சப் இன்ஸ்பெக்டர் வரதனாக அருள்நிதி விரைப்பான, மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் உருட்டல், மிரட்டலுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தன் முத்திரை பதித்து தனித்து நிற்கிறார்.த்ரில்லர் நாயகன் என்ற பட்டத்தை விரைவில் பெற்று விடுவார் அருள்நிதி.

உதவி ஆய்வாளர் பவித்ராவாக அதிரடி காட்டும் அறிமுக நடிகை பவித்ரா மாரிமுத்து. சாம்ஸ், ஷாரா சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.கிஷோர், செம்பி, அஜய்ரத்னம், ஜெயப்பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள். மற்றும் பலர் படத்தில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

ரான் ஈத்தன் யோஹனின் இசை மற்றும் பின்னணி இசை மிரள வைப்பதில் வெற்றி பெறுகிறார்.

அரவிந்த் சிங்கின் கேமிரா கோணங்கள் உதகை மலையின் அழகை லாங் ஷாட்டில் காண்பித்து, வளைந்து நெளிந்து போகும் ரோடுகள், மலை அருவி, பேருந்தின் பயணம், கொண்டை ஊசி வளைவு, மர்மங்கள் என்று வித்தியாசமான காட்சிக் கோணங்கள் திரில்லிங் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் திகட்ட திகட்ட கொடுத்து அசத்தியுள்ளார்.

கலை இயக்குநர் ராஜூவின் கைவண்ணம் மிகச் சிறப்பாக உள்ளது. எடிட்டர் ராஜ சேதுபதி சில காட்சிகளை குறைத்திருக்கலாம்.

ஆரம்ப காட்சியில் வழக்கு விசாரணை என்று தொடங்கும் கதைக்களம், பின்னர் கொலை, கொள்ளை, பேருந்து பயணம், ஆமானுஷ்ய பயமுறுத்தல் என்று இடைவேளை வரை கேள்விக்குறியோடு முடித்து அதன் பின் விறுவிறுப்பாக பல திருப்பங்களை தந்து முடித்துள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன். ஒரே படத்தில் திகில், த்ரில், கற்பனை, ஆக்ஷன் என்று இத்தனையும் கலந்து கொடுக்க நினைத்து எதை சொல்வது, எதை விடுவது, எதை புரிய வைப்பது என்பதை கொஞ்ச நேரம் யோசித்து எடுத்திருக்கலாம் இயக்குனர் இன்னாசி பாண்டியன். மிட்நைட் பஸ் 375 என்று அழைக்கப்பட்டு சீனாவில் 1995ம் ஆண்டு நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் பலரது வாழ்க்கைக்குறிப்பை ஒரே படத்தில் புரட்டி போடும் ஆக்ஷன் கலந்த மர்மங்கள் நிறைந்த த்ரில்லிங் பயண அனுபவத்தை கொடுக்கும் டைரி