ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயர் பரிசீலனை

0
52

ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயர் பரிசீலனை

மை நேம் ஈஸ் பாண்ட்.ஜேம்ஸ் பாண்ட், உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களை மயக்கிய மந்திரச்சொல் இது, பிரிட்டன் உளவுத்துறையின் எம்ஐ6இல் பணிபுரிபவர்தான் ரகசிய ஏஜென்ட் என உருவாக்கப்பட்டதுதான் கற்பனை கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட். உலகை ஈர்த்த இந்த கதாபாத்திரத்தை பிரபல எழுத்தாளர் இயான் ஃப்ளெமிங் 1953ஆம் ஆண்டு உருவாக்கினார். இக்கதாபாத்திரத்தை வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் ஏற்று நடித்த போதிலும் ஷான் கானரி, ரோஜர் மூர் உள்ளிட்ட சிலரே புகழ் பெற்றனர். இறுதியாக இந்தாண்டு வெளியான 25ஆவது ஜேம்ஸ்பாண்டு படமான நோ டைம் டு டை படத்தில் டேனியல் கிரெய்க் நடித்தார்.

இதன் பின் அடுத்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் புதிய நடிகரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இத்ரிஸ் எல்பா , டாம் ஹார்டி, ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா என 5 பேரின் பெயர் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்வரிசையில் மற்றொரு பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயரும் சேர்ந்துள்ளது. சில படங்களில் சூப்பர் மேன் வேடத்தில் நடித்தவர் ஹென்றி கேவில். கேசினோ ராயல் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஹென்றி கேவில்லின் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு டேனியல் கிரெய்க்கிற்கு போய்விட்டது. தனது தோற்றத்தை சரி செய்து கொண்டு மீண்டும் ஜேம்ஸ்பாண்டு வேடத்தை ஏற்பேன் என அப்போது உறுதிபட கூறியிருந்தார் கேவில்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஹென்றி கேவில் பெயர் ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்திற்கு அடிபடுகிறது. திரைப்பட ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ்பாண்டு பாத்திரத்திற்கு ஹென்றி கேவில் பொருத்தமாக இருப்பார் என ட்விட் செய்ய தொடங்கிவிட்டனர். எனினும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்பது அடுத்தாண்டுதான் தெரியும். அந்த அதிர்ஷ்டக்காரர் யார் என்பதை ஜேம்ஸ்பாண்டு படத்தின் தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலி முடிவு செய்வார்.