ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா & ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு

0
120

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா & ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்த படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பா.ம.க. தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஜெய் பீம் படத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய்பீம் பட விவகாரத்தில் மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன் என்று அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் கோர்ட்டில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை வெளியிட்ட ஓடிடி தளம் மீதும் வழக்கு தொடரபட்டது.
அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு சிதம்பரம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.