ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’

0

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும்  ‘குடிமகன்’

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில்  உள்ளவர்களுக்குத்  தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை  மையமாகக்  கொண்டு  இயக்குநர்  சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி  இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்  கொண்ட  ஒரு அழகான  கிராமத்தில் கந்தன்,  செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற  8 வயது மகனுடன்  வசித்து வருகிறார்கள்.  மகனின் மீது அதிக அன்பும்,  அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள்.  மகிழ்ச்சியாக  போய்க்கொண்டிருக்கும்  இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து  மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து  பேரதிர்ச்சியைத்  தருகிறார், அந்தஊர் கவுன்சிலர்.

அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.  பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும்  போராடிக்  கொண்டிருக்கிறார்.

இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும்  மாறிவிடுகிறான்.  இதனால்  கந்தனின்  மனைவி செல்லக்கண்ணுவும்,  மகன்  ஆகாஷும்  பல  கஷ்டங்களை சந்திக்கிறார்கள்.  ஒரு கட்டத்திற்கு  மேல் தாங்க  முடியாமல்,  யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச்  செய்து  ஒட்டுமொத்த  கிராமத்தையும்  அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சத்தீஷ்வரன்.

இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ்  சினிமாவின் முக்கியமான  ஆளுமைகளில்  ஒருவரான பிரபல  கதாசிரியர்  மற்றும் தயாரிப்பாளர்  கலைஞானத்தின்  பேரன் ஆவார்.  செல்லக் கண்ணுவாக “ஈரநிலம்”  ஜெனிபர் நடிக்கிறார்.  இவர்களுடன்  “மது ஒழிப்பு  போராளி”  மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன்  ஆகியோர் முக்கியமான  கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குவதோடு  மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார்  சத்தீஷ்வரன்.