சொப்பன சுந்தரி திரைவிமர்சனம்: சொப்பன சுந்தரி குடும்பத்தினருடன் சேர்ந்து ஜாலியாக ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5
எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீபா சங்கர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஷ ரா, கருணாகரன், சதீஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஒளிப்பதிவு ஜி.பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன். படத்தொகுப்பு சரத்குமார், புவன் சீனிவாசன். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் – ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உடன் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைக்க, அஜ்மல் தஹ்சீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு : யுவராஜ்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய கீழ் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனக்கு வரப்போகும் பிரச்சனையை அறியாமல் அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை வென்றாள். அகல்யா ஒரு வயதான தந்தை, தாய் (தீபா) மற்றும் ஒரு ஊமை அக்கா தேன்மொழி (லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி) உடன் வசித்து வருகின்றார். ஏழ்மையின் காரணமாக தேன்மொழிக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. அகல்யா ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து குடும்பத்தை சமாளித்து வருகிறார். அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கிடைத்த பரிசை வைத்து தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசிக்கிறார் அகல்யா. அந்த சமயத்தில் குடும்பத்தில் இருந்து விலகிய அகல்யாவின் அண்ணன் (கருணாகரன்) அந்த கார் தனக்கு தான் சொந்தம் என்று பிரச்னை செய்கிறார். இதனால் கார் போலீசிடம் சிக்கி கொள்கிறது. அங்கே காமம் நிறைந்த இன்ஸ்பெக்டர் பார்வை அகல்யா மீது பாய்கிறது. இதனால் அகல்யாவுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் அவளது அக்கா தேன்மொழி மற்றொரு குண்டை வீசுகிறாள். காரின் டிக்கிக்குள் ஒரு சடலம் இருப்பதை அவள் அகல்யாவிடம் தெரிவிக்கிறாள். இந்த சிக்கலான சூழ்நிலையையும், காமம் நிறைந்த இன்ஸ்பெக்டரையும் அகல்யா எப்படி சமாளிக்கிறார்? அந்த காரை வெளியில் எப்படி எடுத்தார்கள்? இறுதியில் அந்த காரின் நிலை என்ன என்பதே மீதி கதை.
காமெடி மற்றும் எமோஷன் கலந்த இந்த கதையில் பணத்திற்கு கஷ்டப்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக அகல்யா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கச்சிதமாக பொருந்தி உள்ளார்.
வாய் பேச முடியாத தேன்மொழி கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் லக்ஷ்மி பிரியா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வழக்கம் போல காமெடியில் அகல்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் தீபா சங்கர் மீண்டும் சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி, காமம் வெறி பிடித்த டெரரான போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் கதாபாத்திரத்தில் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, ஷ ரா, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தி அசத்தலான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்கள்.
ஜி.பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோரின் ஒளிப்பதிவு, சரத்குமார், புவன் சீனிவாசன் படத்தொகுப்பு, அஜ்மல் தஹ்சீன் இசை மற்றுமு; விஷால் சந்திரசேகர் பின்னணி இவர்களின் தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் நகைச்சுவையை அங்கும் இங்கும் உயர்த்த உதவுகிறது.
ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் வந்த காரைச் பற்றிய கதையில், அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட்டால் என்ன என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைத்து கொடுக்க முயற்சி செய்துள்ளார் எஸ்.ஜி சார்லஸ். கதைக்கு பெருத்தமான தலைப்பு சொப்பன சுந்தரி. இருப்பினும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சொப்பன சுந்தரி இன்னும் சிறந்த படமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் – ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உடன் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் சொப்பன சுந்தரி குடும்பத்தினருடன் சேர்ந்து ஜாலியாக ரசிக்கலாம்.