செத்தும் (சீர்திருத்தம்) செய்த விவேக்

0
12

செத்தும் (சீர்திருத்தம்) செய்த விவேக் – மீரான்முகமது முகநூல் பதிவு

மீரான்முகமது

தங்கள் வாழ்க்கை மூலம் சமூகத்திற்கு பாடம் நடத்தி, இறந்த பிறகும் அதன் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறவர்களே உலகின் சிறந்த தலைவர்களாக போற்றப்படுகிறார்கள். முகமது நபி, இயேசு கிறிஸ்து, புத்தர், கார்ல் மார்க்ஸ், லெனின், மண்டேலா, காந்தி,பெரியார், சேகுவேரா, பிரபாகரன் அப்படிப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர்கள்.
சில எளிய மனிதர்களும் தங்கள் வாழ்க்கை மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு பாடத்தை நடத்தி விட்டுச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சாதனையை விவேக் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அவரின் மரணம் குறித்த இரங்கல்களிலும், கவிதைகளிலும், கண்ணீர்களிலும், அழுகையிலும் அது அமுங்கி போய்விடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு.
விவேக் ஆகச் சிறந்த கடவுள் நம்பிக்கையாளர். கோவில்பட்டி 18ம் படி கருப்புதான் அவரது குல தெய்வம். அந்த கோவிலுக்கு அவர் நிறைய செய்திருக்கிறார். ஆனால் கருப்புதான் விவேக்கை கடைசி வரை கண்டு கொள்ளவில்லை. ஆசை ஆசையாய் வளர்த்த மகனை பறித்தார். இப்போது அவரையும் பறித்துக் கொண்டார்.
அவர் எதிர்த்தது எல்லாம் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும், ஏமாற்று வேலைகளையும்தான். பெரியாரும், எம்.ஆர்.ராதாவும், என்.எஸ்.கிருஷ்ணனும் செய்த வேலையை அவர் தொடர்ந்தார். வாழும் காலம் முழுவதும் பகுத்தறிவு சிந்தனை, மரம் வளர்ப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு என தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார்.
தனது கருத்தையும், கொள்கையையும் அவர் வெளி உலகத்திற்கு சொன்னதைப்போன்றே தன் குடும்பத்துக்கும் சொன்னார். அவருக்கு மொத்தம் 4 பெண் குழந்தைகள் என்பது உலகம் அறிந்திராத ரகசியம். ஒரே ஒரு மகன் பிரசன்ன குமார் இப்போது இல்லை. காலம் பறித்துச் சென்ற விவேக்கின் அன்பு கருவூலம் அவன்.
பெண் குழந்தைகளுக்கு தெய்வ நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்தே கற்பித்தார். ஆண்களுக்கான அத்தனை உரிமையும் பெண்களுக்கு உண்டு என்று போதித்து வளர்த்தார். என்றாலும் தன் குடும்பத்தின் மீது சினிமாவின் சாயல் படாமல் பார்த்துக் கொண்டார். தன் புகழ் வெளிச்சம் தன் குழந்தைகளின் சுதந்திரத்தையும், தனித்தன்மையும் பாதிக்க கூடாது என்று அவர் நினைத்தார்.
விவேக்கின் இறுதி சடங்கில் அவரது 2வது மகள் தேஜஸ்வினி இறுதி சடங்குகளைச் செய்தார்’. பத்திரிகைகளில் இது இரண்டு வரி செய்தியாக கடந்து விட்டது. ஆனால் இது எத்தனை பெரிய சமூக புரட்சி என்பதை உணர வேண்டும். விவேக் பிறந்த சமூகத்தில் இறப்பு நிகழ்ந்த வீடுகளில் பெண்கள் தெருவை தாண்டி வரக்கூடாது என்பதே விதி.
“வீதி வரை மனைவி…” என்று கண்ணதாசன் எழுதினார். மனைவி என்கிற குறியீடு பெண்களையே குறிக்கும். ஆண் குழந்தைகள்தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும். நேரடி வாரிசு இல்லாவிட்டால் அண்ணன் மகனோ, தம்பி மகனோ அந்த கடமையை நிறைவேற்றுவார்கள்.
ஆனால் விவேக்கின் இறுதி சடங்குகளை ஒரு மகனின் ஸ்தானத்தில் நின்று கொண்டு ஆண்களை போன்று வேஷ்டி அணிந்து செய்து முடித்திருக்கிறார் மகள். அதற்கு காரணம் விவேக்கின் வளர்ப்பு, அவர் கற்றுக் கொடுத்த பாடம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர், இயக்குனர் லீனா மணிமேகலை தன் தந்தையின் இறுதி சடங்கை தானே செய்தது பெரிய மாற்று சமூக சிந்தனையாக பார்க்கப்பட்டது. அதே விஷயத்தை லட்சம் மக்கள் கூடி நிற்க செய்து காட்டியிருக்கிறார் அமிர்தநந்தனி.
வாழும்போது சாதித்தை விட மறைந்த பிறகும் சாதிப்பவர்களே சரித்திரத்தில் இடம் பெறுவார்கள். விவேக்கும் அப்படியே…

நன்றி

மீரான்முகமது
முகநூல் பதிவு