சுல்தான் விமர்சனம்

0
34

சுல்தான் விமர்சனம்

பிரபல ரவுடி நெப்போலியனின் மகன் கார்த்தி, தன் தந்தையின் வழியில் செல்லாமல் மும்பையில் படித்து நல்ல வேலையிலும் இருக்கிறார். நெப்போலியன் நூறு அடியாட்களை தன் வீட்டிலேயே தங்க வைத்து தன் அடிதடி தொழிலுக்கு உதவியாக வைத்துக் கொள்கிறார்.இதில் கார்த்திக்கு விருப்பம் இல்லை என்றாலும் தன் தந்தையை பார்க்க சென்னைக்கு திரும்பும் போது கண்ணெதிரே சில நாட்களில் தந்தை நெப்போலியன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். தந்தையின் கடைசி ஆசையான கார்ப்பேரட் கம்பெனியிடமிருந்து கிராமத்தை காப்பாற்ற சேலத்திற்கு நூறு ஆட்களுடன் புறப்படுகிறார். அங்கே அடிதடி இல்லாமல் நல்வழியில் நூறு பேரை திருத்த முயற்சி செய்து கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். எப்பொழுதுமே வெட்டுக் குத்து என்று திரியும் அடியாட்களுக்கு இது புது அனுபவமாக இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடியாட்களை கார்த்தி  எப்படி சமாளித்தார்? கார்ப்பரேட் கம்பெனியின் தொல்லையையும் எப்படி கையாண்டார்? தன் தந்தையின் வாக்கை காப்பாற்றினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

சுல்தானாக கார்த்தி முதலில் அமைதியாக தோன்றி பின்னர் ஆக்ஷன்; காட்சியிலும், காதல் காட்சியிலும் யதார்த்தமாக நடித்து அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் காதலியாக ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக வலம் வந்து முறைப்பு, விரைப்புடன் காதல் செய்கிறார்.

நெப்போலியன், லால் இருவரும் அளவான நடிப்பை கொடுத்து மனதில் நிற்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, அபிராமி, நவாப் ஷா, கேஜிஎஃப் ராம், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி, மாரிமுத்து, சென்ராயன், விக்ரமாதித்ய தாத்தா, சாந்தி, ஹரிஷ் பேராடி, சுக்விந்தர் சிங், காமராஜ், பிரின்ஸ், காளையன், பிரபு, சரத், ரமா ஆகியோருடன் கார்த்தியின் அண்ணன்களாக வரும் அடியாட்களின் எண்ணிக்கை அசர வைத்து அதிர வைக்கிறது.

விவேக் மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தாளம் போட வைக்கிறது.

ரவுடிகளின் கூட்டத்தை காட்டும் ஒவ்வொரு காட்சிக் கோணங்களிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் சத்யன் சூரியனின் அயராத உழைப்பு ஒளிப்பதிவில் தெளிவாக தெரிகிறது.

முரட்டு ஆசாமிகளை அடக்கி தன் சொல் கேட்கும் மனிதர்களாக மாற்றி திருத்த முயற்சிக்கும் இளைஞனின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை காதல், மோதல், சண்டை, செண்டிமெண்ட் கலந்து கமர்ஷியல் படமாக கார்த்திக்கு ஒரு ஆக்ஷன் படமாக கொடுத்து சிற்ப்பாக இயக்கியிருக்கிறார் பாக்யராஜ் கண்ணன். இதில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியுள்ளார்.

மொத்தத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் படம் சுல்தான் அண்ணன்களை காப்பாற்றப் போராடும் ஆக்ஷனில் ராஜாதிராஜா.