சில்லுக்கருப்பட்டி திரை விமர்சனம்

0

சில்லுக்கருப்பட்டி திரை விமர்சனம்

ரேட்டிங்

2 டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் டிவைன் ப்ரொடக்ஷன்ஸ் வெங்கடேஷ் வெளினேனி   தயாரிப்பில் சக்தி பிலிம் பாக்ட்ரி சிக்னேச்சர் ரிலீஸ் வெளியீட்டில் சில்லுக்கருப்பட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹலிதா ஷமீம்.

நான்கு அழகான குறுங்கதைகள் கொண்ட ஆந்தாலஜி பாணியில் அன்பை மையமாக வைத்து நகரப் பின்னணியில் சில்லுக்கருப்பட்டி வெளியாகியுள்ளது. இந்த கருப்பட்டி கசக்குமா? இல்லை இனிக்குமா என பார்ப்போமா?

குப்பை பொறுக்கும் மாஞ்ஜா (ராகுல்) தினமும் ரோஸ் நிற கவரில் விழும் குப்பையில் இருந்து  பலவித வீணான பொருட்களை எடுக்கிறான். அதிலிருந்து எடுக்கும் பொருட்களை வைத்து பணக்கார வீட்டுப் பெண் மிட்டி (சரரா) என்பதை அறிந்து கொள்கிறான். இதனிடையே ஒரு நாள் அந்த குப்பைக் கவரில் தவறுதலாக வைர மோதிரம் இருப்பதை அறிந்து அதை உரியவரிடம் சேர்க்க ஆசைப்படுகிறான். மிட்டியை தேடி குப்பை அள்ளும் வண்டியில் தெருதெருவாக பயணிக்கிறான். இறுதியில் மிட்டியை (சாரா) கண்டுபிடித்தானா? வைர மோதிரத்தை ஒப்படைத்தானா? பதிலுக்கு மிட்டி என்ன செய்தாள்? என்பதே  முதல் குறுங்கதை.

ஐடியில் வேலை செய்யும் முகிலன்(மணிகண்டன்) தன் காதலியை திருமணம் செய்து கொள்ள இருக்கும் சமயத்தில் கேன்சர் நோய் இருப்பதை அறிகிறார். திருமணம் நின்று போக வாடகை காரில் பயணிக்கும் போது முகிலனின் மனவேதனையை புரித்து கொள்ளும் மதுவின் (நிவேதித்தா) நட்பு கிடைக்கிறது.  மதுவின் நட்பு முகிலனுக்கு மருந்தாக அமைந்ததா? கேன்சரிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே இரண்டாவது குறுங்கதை. மணிகண்டன், நிவேதிதா சதீஷ் அந்த கதாபாத்திரங்களுன் ஒன்றி யதார்த்தமாக நடித்துள்ளனர்.

முதுமையில் தனியாக வாழும் யசோதா(லீலா சாம்சன்) சமூக சேவையிலும், அக்கம் பக்கத்தில் நட்பாக பழகும் குணமுடையவர்.பூங்காவில் யசோதாவை பார்த்தவுடன் நவநீதனுக்கு(ஸ்ரீராம்) ஈர்ப்பு ஏற்பட பல சந்தர்ப்பத்தில் சந்தித்து பேசுகிறார். முன்பின் தெரியாத நவநீதனின் அன்பால் திக்கு முக்காடிப் போகும் யசோதாவிற்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இதனால் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கி போகிறார். சில மாதங்கள் கழித்து ஸ்ரீராம் யசோதாவின் வீட்டை கண்டுபிடித்து வந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்து கொள்கிறார். முதுமையிலும் இவர்களின் அன்பு, பாசத்தால் அவர்களது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை சொல்லும் அருமையான வாழ்க்கை பதிவு! மூன்றாம் கதை.

தனபால்(சமுத்திரகனி)-அமுதினி(சுனைனா) தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். அலுவலுக வேலையிலேயே மூழ்கி இயந்திரமாக இருக்கும் தனபால், மனைவியின் ஆசைகளை உதாசினப்படுத்தும் போது சண்டை ஏற்படுகிறது. இவர்களின் சண்டை சமாதானமானதா? தனபால் தன் தவறை உணர்ந்து மனைவியின் அன்பை இறுதியில் புரிந்து கொண்டாரா? என்பதே நான்காம் குறுங்கதை. சமுத்திரகனி கணவராக கலக்கியிருக்கிறார். சாதாரண குடும்ப பெண் போல இயல்பாக நடித்திருக்கிறார் சுனைனா.

இந்த நான்கு குறுங்கதைகளையும் ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி ஆகியோரின் பங்களிப்பு காட்சிக் கோணங்களுக்கு நான்குவித திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பிரதீப்குமாரின் இசை படத்தின் கதைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் இசையமைத்து உயிரூட்டியிருக்கிறார். பின்னணி இசையும் சில்லுக்கருப்பட்டிக்கு பலம் சேர்த்துள்ளது.

இதில் நடித்த சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் கே, நிவேதிதா சதீஷ், க்ராவ்மகா ஸ்ரீராம், ராகுல்; தங்கள் பாத்திரத்தை உணர்ந்து உணர்வுபூர்வமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம்-ஹலிதா ஷமீம். நகரத்தில் நடக்கும் நான்கு குறுங்கதைகள் இளம் காதல், பருவ காதல், நடுத்தர காதல், முதுமைக்காதல் இவை நான்குமே பிரதிபலனை எதிர்பார்க்காத அன்பை ஒன்றையே மையமாக வைத்து பயணிக்கும் விதமாக, நினைத்த விஷயங்களை சிறப்பாக திரைக்கதையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் ஹலிதா ஷமீம்.

மொத்தத்தில் நினைத்தாலே இனிக்கும் அன்பை பொழியும் சில்லுக்கருப்பட்டி.

நம்ம பார்வையில் ‘சில்லுக்கருப்பட்டி’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.