‘சிம்பு குரல்.. ஸ்டைலிஷ் நடனம்.. ’தி வாரியர்’: தெறிக்கவிடும் ’புல்லட்’ பாடல்
லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மாதவன் – ஆர்யா நடித்த ‘வேட்டை’ படத்திற்குப் பிறகு லிங்குசாமி ‘தி வாரியர்’ மூலம் காவல்துறை கதைக்களத்தைக் கையில் எடுத்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே, ’தி வாரியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று படத்தின் முதல் பாடலான ‘புல்லட்’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே சிம்பு பாடியுள்ளார். தமிழில் விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். ‘நீ கிட்ட வந்து நின்னா ஹார்ட் பீட்டு ஸ்பீடாகுது.. நீ தொட்டு ஏதும் சொன்னா ப்ளட்டு சுடாகுது’ என செம்ம உற்சாகமுடன் பாடி நம் ஹார்ட் பீட்டை சூடாக்கியிருக்கிறார். புல்லட்டின் தனித்த சத்தம் போலவே இந்த ‘புல்லட் பாடலும் தனித்து கவனம் ஈர்க்கிறது.
அவரது குரலோடு நடிகர் ராம் பொத்தினேனி செம்ம ஸ்டைலிஷாக நடனத்தில் தெறிக்கவிடுகிறார். சேகர் மாஸ்டர் புல்லட் வண்டியை ஓட்டுவதுபோலவே நடனம் அமைத்துள்ள இப்பாடல் இசைக்கு மட்டுமல்ல நடனத்திற்கும் நிச்சயம் பேசப்படும்.