சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி – தமிழக அரசு

0

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி – தமிழக அரசு

“சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. மேலும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஏராளமான திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்தாலும் திரையிட முடியாத நிலை நீடிக்கிறது. இதனிடையே சின்னத்திரை சீரியல்கள் ஒளிபரப்பு, படப்பிடிப்பு நடத்தப்பட முடியாததால் இடையிலேயே நிறுத்தப்பட்டன. அதற்கு பதில் ஏற்கெனவே ஒளிபரப்பட்ட பகுதிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதில் பல தொழில் நிறுவனங்கள், கடைகளுக்கு சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தலாம்.படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. ஊரகப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.